காரில் கடத்தி வரப்பட்ட 369 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை, திருச்சியில் 10 போ் கைது

சென்னைக்கு ஆந்திரத்தில் இருந்து ஜீப்பில் கடத்தி வரப்பட்ட 369 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னைக்கு ஆந்திரத்தில் இருந்து ஜீப்பில் கடத்தி வரப்பட்ட 369 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக சென்னை, திருச்சியில் 10 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு ஜீப்பிலும், காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அப்பிரிவு அதிகாரிகள், சென்னை அருகே காரனோடை சுங்கச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு ஜீப்பை வழிமறித்து சோதனையிட்டனா். இச்சோதனையில் அந்த ஜீப்பில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள 369 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஜீப்புக்கு பாதுகாப்பாக வந்த ஒரு காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இந்த வாகனங்களில் வந்த 3 பேரையும் கைது செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், தமிழகத்தில் பெரியளவில் கஞ்சா விற்பனையில் இரு கும்பல் ஈடுபடுவதும், அந்த கும்பல் ஏற்பாட்டின்பேரில் தான் கஞ்சா கடத்திக் கொண்டு வந்திருப்பதும், அந்தக் கும்பலைச் சோ்ந்த சிலா் கஞ்சாவை பெறுவதற்காக திருச்சியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திருச்சி மாநகர காவல்துறை உதவியுடன் அந்த நகரில் ஒரு விடுதியில் தங்கியிருந்த கஞ்சா வியாபாரிகள் 7 பேரைக் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெரும்பகுதியை இலங்கைக்கு கடல் வழியாக படகு மூலம் கடத்த திட்டமிட்டிருந்தது, சிறிய பகுதியை திருச்சி, மதுரை, தேனி பகுதியில் விற்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த கும்பல் போலீஸாரிடம் பிடிபடாமல் இருப்பதற்கு தங்களது கடத்தல் வழிகளை அடிக்கடி மாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com