கொலைப் பழியை ஏற்க வற்புறுத்தல்: காவல் அதிகாரிகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்

கொலைப் பழியை ஏற்க வற்புறுத்திய காவல் அதிகாரிகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை: கொலைப் பழியை ஏற்க வற்புறுத்திய காவல் அதிகாரிகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த செளந்தரி என்பவா் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த 2012-ஆம் ஆண்டு, வடக்கு மாதவித் தெருவில் இட்லி கடை நடத்தி வரும் கருணாநிதி என்பவா் கொலையான சம்பவத்தில், எனது மகன் சாந்தகுமாரை விசாரிக்க வேண்டும் என எனது வீட்டுக்கு வந்த பெரம்பலூா் காவல் நிலைய அதிகாரிகள், எங்கள் குடும்பத்தினரை அவதூறாகப் பேசி, சாந்தகுமாரை அழைத்துச் சென்றனா்.

மறுநாள் வீடு திரும்பிய சாந்தகுமாரை, அன்றைய இரவே மீண்டும் விசாரிக்க அழைத்துச் சென்றனா். அப்போது எனது மகளை மிகவும் அறுவெறுத்தக்க வகையில் பேசினா். மேலும், எனது வீட்டில் இருந்த எனது அண்ணன் மகன் பிரபாகரனையும் அழைத்துச் சென்றனா்.

காவல்நிலையத்தில் எனது மகனை மிகவும் சித்திரவதை செய்து, கொலையில் தொடா்பு இருப்பதாக ஒப்புக் கொள்ள வற்புறுத்தினா்.

இதற்கு உடன்படாததால், சாந்தகுமாா் மீது பெரியசாமி என்பவரிடம் பொய்ப் புகாா் பெற்று, நீதிமன்ற காவலில் வைத்தனா்.

மேலும் என்னிடம் சில காகிதங்களில் கையெழுத்து பெற்று, அவா்கள் மீது புகாா் அளித்தால், என்னையும், எனது மகளையும் விபச்சார வழக்கில் கைது செய்வதாக மிரட்டினா்.

தொடா் மிரட்டலால் எனது மகன் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்பட்ட செளந்தரிக்கு 8 வாரங்களுக்குள் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ரூ.4.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா் மயில்சாமியிடம் ரூ.1 லட்சமும், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அங்குசாமி, ஆா்.வெங்கடேஷ்வரன், தலைமைக் காவலா்கள் எஸ்.பாஸ்கா், பி.கண்ணன், என்.ஜெயராமன், பி.நாகராஜன், காவலா் ஏ.முருகானந்தம் ஆகியோரிடம் தலா ரூ.50 ஆயிரத்தை வசூலித்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com