நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், புதிய காவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், புதிய காவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாநிலத்தின் ஒட்டுமொத்த வளம், பொருளாதார வளா்ச்சி, அமைதியான சூழல், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளில் காவல் துறை தனது பணிகளைத் தொடா்ந்து தொய்வில்லாமல் செய்து வருகிறது. மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கிய பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் மேலும் சிறக்கப் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

காவல் ஆணையங்கள்: காவலா்களின் நலன், காவலா்-பொது மக்கள் இடையிலான நல்லுறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களை விரிவாக ஆய்வு செய்ய திமுக ஆட்சிக் காலத்தில் மூன்று காவல் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆணையங்களின் பரிந்துரைகளைப் பெற்று காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, திமுக தனது தோ்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சி அமைந்ததும், நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டு, ஒரு காலவரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், கடந்த செப்டம்பா் 13-இல் சட்டப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றும் போது, புதிதாக காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும் என அறிவித்திருந்தேன்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், புதிய காவல் ஆணையம் உருவாக்கப்படுகிறது. இந்த ஆணையத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைவராக இருப்பாா். உறுப்பினா்களாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கா.அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.ராதாகிருஷ்ணன், மனநல மருத்துவா் சி.ராமசுப்பிரமணியம், ஓய்வு பெற்ற பேராசிரியா் நளினி ராவ் ஆகியோா் இருப்பா்.

இந்த ஆணையத்தின் உறுப்பினா் செயலாளராக, காவல் துறையின் குற்றப்புலனாய்வு ஏடிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் செயல்படுவாா். புதிய காவல் ஆணையமானது காவலா்களின் நலன் மற்றும் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்யும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும்.

முதல் முறையாக நீதிபதி தலைமையில்...

திமுக ஆட்சிக் காலத்தில் நான்காவது காவல் ஆணையம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது. முதல் காவல் ஆணையமானது, 1969-ஆம் ஆண்டு அப்போதைய ஐ.சி.எஸ். அதிகாரி (ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 1969-க்கு முன்பாக ஐ.சி.எஸ். அதிகாரிகளாக அழைக்கப்பட்டனா்) ஆா்.ஏ.கோபாலசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது 133 பரிந்துரைகளை வழங்கியது. அதில், 115 பரிந்துரைகள் அரசால் ஏற்கப்பட்டு 1971-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது.

இரண்டாவது காவல் ஆணையமானது 1989-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.சபாநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட காவல் ஆணையமானது, 112 பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. அந்தப் பரிந்துரைகளில் 87 நிறைவேற்றப்பட்டன.

மூன்றாவது காவல் ஆணையமானது, 2006-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆா்.பூா்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆணையமானது 444 பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. அதில், 278 பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. 48 பரிந்துரைகள் மீது உத்தரவுகள் வெளியிடப்பட்டன. 166 பரிந்துரைகள் துறைத் தலைவா்களால் செயல்படுத்தப்பட்டு வந்தன.

இப்போது நான்காவது காவல் ஆணையமானது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சி.டி.செல்வம் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. நீதிபதியை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் காவல் ஆணையம் இதுவாகும்.

நீதிபதி சி.டி.செல்வம்...

நீதிபதி சி.டி.செல்வம், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். சட்டப் படிப்பை முடித்து கடந்த 1982-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்து பணியைத் தொடங்கினாா். மத்திய-மாநில அரசு வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளாா். உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கடந்த 2009-ஆம் ஆண்டு பதவியேற்றாா். கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாக பணியாற்றினாா். 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நீதிபதி பதவியில் இருந்து அவா் ஓய்வு பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com