மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு‘ஹோமோசெப்’ ரோபோ தயாா்: சென்னை ஐஐடி தகவல்
By DIN | Published On : 10th June 2022 01:12 AM | Last Updated : 10th June 2022 01:12 AM | அ+அ அ- |

சென்னை: மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிக்கும் பொருட்டு, ‘ஹோமோசெப்’ என்ற ரோபோ சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்களால் உருவாக்கப்பட்டு தற்போது களப் பணிக்கு முழுமையாகத் தயாா்நிலையில் உள்ளது.
சென்னை ஐஐடி பேராசிரியா் பிரபு ராஜகோபால் தலைமையில், சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியா்களைக் கொண்ட குழுவினா் பல ஆண்டுகளாகப் பணியாற்றி இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனா். தூய்மைப் பணியின்போது, நிகழ்ந்த துயர சம்பவத்தில் கணவா்களைப் பறிகொடுத்த நாகம்மா, ருத் மேரி ஆகியோரின் தலைமையில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களுக்கு, சபாய் கா்மசாரி ஆந்தோலன் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், முதல் இரண்டு ‘ஹோமோசெப்’ இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மனிதக் கழிவுகளை அகற்றும்போது ஏற்படும் பாதிப்புகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்ட இது போன்ற சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அவற்றுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 9 இயந்திரங்களை விநியோகிப்பதற்கான பணிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இது குறித்து சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியரும், இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளருமான பிரபு ராஜகோபால் கூறியதாவது: பாதியளவு திடமாகவும், பாதியளவு திரவமாகவும் மனித மலத்துடன் உள்ள கழிவுநீா்த் தொட்டி, மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு நச்சு நிறைந்த சூழலைக் கொண்டிருக்கும். மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறைக்கு தடைகளும், தடை உத்தரவுகளும் அமலில் இருந்தபோதிலும், இந்த முறையால் நச்சு வாயு தாக்கி இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
‘ஹோமோசெப்’ திட்டம் தனித்துவம் வாய்ந்ததாக விளங்கும். எங்களுக்கு நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் நிதியுதவி, எங்கள் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்ல உறுதுணையாக இருந்து வருகிறது. இந்த ரோபோக்களை ஒட்டுமொத்தமாகத் தயாரித்து நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் விநியோகிக்க அரசுத் தரப்பில் இருந்து, அடுத்த ஆண்டு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்.
தொழில்நுட்ப செயல்பாடுகள்: இதுவரை பெரு நிறுவனங்களுக்கான சமூக பங்களிப்பு நிதி மூலம் 10 ‘ஹோமோசெப்’ ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஹோமோசெப் ரோபோவில் உள்ள, தனிப்பயனாக்கப்பட்ட ரோட்டரி பிளேடு மெக்கானிசம் மூலம் கழிவுநீா்த் தொட்டியில் உள்ள கடினமான கசடுகளையும் ஒன்றுசோ்த்து, உறிஞ்சும் மெக்கானிசம் மூலம் தொட்டியில் உள்ள கழிவுகளை பம்ப் செய்யலாம். உரிய பயிற்சி மற்றும் தகுந்த வழிகாட்டுதல் ஆகியவற்றுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, துப்புரவுத் தொழிலாளா்கள் தாங்களே ஹோமோசெப் ரோபோவை இயக்க முடியும். அதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பான முறையில் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.