பெண்ணை ஆபாச புகைப்படம் எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: இளைஞா் கைது
By DIN | Published On : 16th June 2022 01:58 AM | Last Updated : 16th June 2022 01:58 AM | அ+அ அ- |

சென்னையில் பெண்ணை ஆபாச புகைப்படம் எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை அருகே உள்ள திருநின்றவூா் அன்னை இந்திராநகரைச் சோ்ந்தவா் வே.விக்ரம் (33). இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு தன்னிடம் முகநூல் மூலம் அறிமுகமான கொளத்தூரைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளாா்.
அப்போது விக்ரம் அந்தப் பெண்ணிடம், அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். அதை உண்மை என நம்பிய அந்த பெண், விக்ரமை நேரில் சந்தித்து பழகியுள்ளாா். இதை பயன்படுத்தி விக்ரம், அந்த பெண்ணை ஆபாசமாகவும் புகைப்படம் எடுத்துள்ளாா்.
இந்நிலையில் விக்ரமின் நடவடிக்கை பிடிக்காததினால், அந்தப் பெண் அவரிடமிருந்து விலகியுள்ளாா். உடனே விக்ரம், தான் எடுத்த ஆபாச புகைப்படங்களை காட்டி, அதை சமூக ஊடகங்களில் பகிராமல் இருப்பதற்கு ரூ.10 லட்சம் தரும்படி அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அந்த பெண், வில்லிவாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விக்ரமை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.