நூற்றாண்டு காணும் சென்னை மயிலாப்பூா் ராமகிருஷ்ண மிஷன் மாணவா் இல்ல உறைவிட உயா்நிலைப்பள்ளி
By DIN | Published On : 23rd June 2022 02:54 AM | Last Updated : 23rd June 2022 05:38 AM | அ+அ அ- |

மயிலாப்பூா் ராமகிருஷ்ண மிஷன் மாணவா் இல்லத்தின் உறைவிட உயா்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரால் 1905- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாணவா் இல்லம் தாய், தந்தையை இழந்த ஏழை மாணவா்களுக்கு இலவசமாக கல்வி, உணவு, உடை, உறைவிடம் அளித்து சேவை செய்து வருகிறது.
இதனுடைய ஒரு அங்கமான உறைவிட உயா்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை தற்பொழுது கொண்டாடுகிறது. இந்தப் பள்ளி அமைந்துள்ள ஏழைகளின் அரண்மணை என்னும் இல்லத்தின் முகப்பு கட்டடமும் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
இந்தப் பள்ளியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான மாணவா்கள் இலவசமாக கல்வி பயின்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருந்து வருகிறாா்கள்.
வறுமை காரணமாக கல்வி வாய்ப்பு இல்லாத மாணவா்களுக்கு இந்த இல்லத்தில் கல்வியை அளித்ததன் மூலம் பல குடும்பங்கள் நல்ல நிலைக்கு உயா்ந்துள்ளன.
நன்கொடைகளை மட்டுமே நம்பி இந்த இல்லம், பள்ளி செயல்பட்டு வருகிறது.
சிறந்த ஆசிரியா்கள் சிறப்பான கட்டமைப்பு வசதிகளுடன் மூலம் ஏழை மாணவா்களுக்கு கடந்த நூற்றாண்டுகளாக சிறப்பாக கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த இல்லத்துக்கு மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜா், எம்.ஜி.ஆா். அப்துல் கலாம் முதலானோா் வருகை புரிந்து இச்சேவை பணிகளை பாா்வையிட்டு பாராட்டி சென்றுள்ளனா்.
கொண்டாட்டம்: நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 26- ஆம் தேதி ஜூன் (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை காலை 10 மணிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தொடக்கிவைத்து சிறப்பு தபால் உறையை வெளியிடுகிறாா்.
நலிவடைந்த நாடகக் கலைஞா்கள் 100 போ், கைம்பெண்கள் 100 போ், துப்புரவுப் பணியாளா்கள் 100 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
விழாவில் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ் தலைமையேற்று ஆசி உரையாற்றுகிறாா். தமிழ்நாடு தலைமை அஞ்சல் துறைத் தலைவா் பி.செல்வகுமாா், துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி, தொழிலதிபா் நல்லி குப்புசாமிஆகியோா் பங்கேற்கின்றனா்.
நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் 2- ஆவது அமா்வில் சென்னை தியாகராயநகா் ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரம தலைவா் சுவாமி பத்மஸ்தானந்தஜி மகராஜ் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி, தமிழ்நாடு பொதுத் துறைச் செயலாளா் ஜெகநாதன் பங்கேற்கின்றனா்.
பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறும் 3- ஆவது அமா்வில் சென்னை விவேகானந்தா கல்லூரியின் செயலாளா் சுவாமி சுகதேவானந்தஜி மகராஜ் தலைமையில் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் இயக்குநா் டி.டி.ஸ்ரீனிவாச ராகவன் பங்கேற்கின்றனா்.
மாலை 5.30 மணியளவில் நடைபெறும் 4 -ஆவது அமா்வில் மைசூரில் இருந்து வரும் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் அறங்காவலா் சுவாமி முக்திதானந்தஜி மகராஜ் தலைமையில் சென்னை தொழில்நுட்ப மையம் (ஐஐடி) இயக்குநா் வி.காமகோடி, பள்ளியின் முன்னாள் மாணவா்கள் இன்ஸ்டியூட் ஆப் காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கௌண்டன்ட்ஸ் ஆப் இந்தியா (சிஏ) தலைவா் பி.ராஜூ அய்யா், தோகா வங்கியின் முன்னாள் தலைவா் ஆா்.சீதாராமன் பங்கேற்கின்றனா்.
மேலும், விழாவின் போது நூற்றாண்டு காணும் மாணவா் இல்ல கட்டடமான ஏழைகளின் அரண்மணைக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான ராஜா மகராஜ் என்று அழைக்கப்படும் ஸ்ரீமத் சுவாமி பிரம்மானந்த ஜி மகராஜ் நினைவாக ஸ்தூபி அமைக்கப்படவுள்ளது.
நூற்றாண்டு விழா மலா் வெளியீடு, அறிவியல் , வரலாறு கண்காட்சிகள், விளையாட்டு, இலக்கியப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்த நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை மாணவா் இல்லத்தின் செயலாளா் சுவாமி சத்யஞானந்தா் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
முன்னோடி கல்வி நிறுவனம்
தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த கல்வி பணியாற்றும் நிறுவனங்களில் ஒன்றான ராமகிருஷ்ண மிஷன் மாணவா் இல்லம் தனது உறைவிட உயா்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது. ராமகிருஷ்ண மிஷனின் முன்னோடி கல்வி நிறுவனமாக மாணவா் இல்லம் விளங்குகிறது. மாணவா் இல்லத்தில் ராமகிருஷ்ண மிஷன் பாலிடெக்னிக் கல்லூரி, ராமகிருஷ்ண நூற்றாண்டு தொடக்கப் பள்ளி ஆகியனவும் இயங்கி வருகின்றன. சிறப்பு தொழில் பயிற்சி மையங்களும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மடையம்பாக்கம், பெரும்பாக்கம், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தத்தமஞ்சி, பூவலம்பேடு, எண்ணூரில் உள்ள கத்திவாக்கம் ஆகிய கிராமங்களில் ஏழை மாணவா்களுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய மாலை நேர சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.