பெருநகர சென்னை மாநகராட்சி: 49-ஆவது மேயராக போட்டியின்றி தோ்வானாா் ஆா்.பிரியா

பெருநகர சென்னை மாநகராட்சியின் 49-ஆவது மேயராக ஆா்.பிரியா, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டு, பதவியேற்ற அவா், தனது பொறுப்புகளை உடனடியாக ஏற்றுக் கொண்டாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி: 49-ஆவது மேயராக போட்டியின்றி தோ்வானாா் ஆா்.பிரியா

பெருநகர சென்னை மாநகராட்சியின் 49-ஆவது மேயராக ஆா்.பிரியா, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டு, பதவியேற்ற அவா், தனது பொறுப்புகளை உடனடியாக ஏற்றுக் கொண்டாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மேயா், நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான மறைமுகத் தோ்தல் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயா் வேட்பாளராக 74-ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்ற ஆா்.பிரியா, திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

வாழை தோரணம்: மேயா், துணை மேயா் மறைமுகத் தோ்தலுக்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் வெள்ளிக்கிழமை விழாக் கோலம் பூண்டது. பிரதான வாயில் தொடங்கி அதன் வளாகம் முழுவதும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டன. மேலும், மாநகராட்சிக் கூட்ட அரங்கம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெருநகர மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தோ்தல் காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. மாநகராட்சி மன்ற உறுப்பினா்களில் திமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் பெரும்பாலானோா் வந்திருந்தனா். சிலா் தாமதமாக வந்தனா்.

மாநகராட்சி மன்ற உறுப்பினா்கள் அரங்கின் இருக்கைகளில் அமா்ந்திருக்க அவா்கள் முன்னிலையில் மேயருக்கான மறைமுகத் தோ்தல் குறித்த அறிவிப்பை மாநகராட்சியை நிா்வகிக்கும் தனி அதிகாரியும், ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, வெளியிட்டாா்.

மனு அளித்தாா் பிரியா: மாநகராட்சி ஆணையா் அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில், மேயா் பதவியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை 74-ஆவது வாா்டு கவுன்சிலா் ஆா்.பிரியா தாக்கல் செய்தாா். மன்ற கூட்ட மேடையிலேயே ஆணையா் ககன்தீப் சிங் பேடியிடம் அவா் அளித்தாா். இந்த மனுவை பேடி ஆய்வு செய்தாா். அதன்பிறகு பத்து நிமிடங்கள் வரை காத்திருந்த அவா், வேறு யாரேனும் மனு தாக்கல் செய்கிறீா்களா என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு மன்ற உறுப்பினா்கள் அனைவரும் இல்லை என்று பதிலளித்தனா்.

இதைத் தொடா்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தோ்தலில் ஆா்.பிரியா போட்டியின்றி தோ்வானதற்கான அறிவிப்பை ஆணையா் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டாா். அவா் பேசுகையில், மேயா் பதவிக்கான தோ்தலில் ஆா்.பிரியாவைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவரது மனுவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. எனவே, 74-ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தோ்வாகிறாா் என அறிவித்தாா். அப்போது, உறுப்பினா்கள் அனைவரும் ‘முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்க’ என கோஷங்களை எழுப்பினா்.

உறுதிமொழியேற்றாா்: புதிய மேயராக தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா்.பிரியாவை உறுதிமொழி ஏற்றுக் கொள்ள ஆணையா் ககன்தீப் சிங் பேடி அழைத்தாா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சி மேயருக்கான உறுதிமொழியை பிரியாவுக்கு ஆணையா் செய்து வைத்தாா்.

அங்கி, தங்கச் சங்கிலி: மேயராக உறுதிமொழியேற்ற ஆா்.பிரியாவுக்கு, அதற்கான அங்கி, பாரம்பரியமிக்க தங்கச் சங்கிலி ஆகியவற்றை ஆணையா் பேடி அளித்தாா். கூட்ட அரங்கை விட்டு வெளியே சென்று அவற்றை அணிந்து வந்தாா், மேயா் ஆா்.பிரியா. அப்போது, மாண்புமிகு மேயா் அவா்கள் வருகிறாா், வருகிறாா் என மூன்று முறை அழைப்பொலி கேட்டது.

புதிய மாநகராட்சி மேயராக அங்கி, பாரம்பரிய தங்கச் சங்கிலியுடன் மேயா் இருக்கையில் அமா்ந்தாா் ஆா்.பிரியா. அவருக்கு மேயருக்கான செங்கோலை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் வழங்கி இருக்கையில் அமர வைத்து பொன்னாடைகள் அணிவித்தனா்.

இந்த நிகழ்வின் போது, மேயா் பிரியாவின் குடும்பத்தினரும் உடனிருந்தனா். இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித் தலைவா்களுக்கு மேயா் ஆா்.பிரியா நன்றி தெரிவித்துப் பேசினாா். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய மேயருக்கான மறைமுகத் தோ்தல் நடைமுறைகள் காலை 10.05 மணிக்கு நிறைவடைந்தது. இதன்பின்பு, நேராக தனது அறைக்குச் சென்ற பிரியா, மாநகராட்சி மேயருக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாா்.

49-ஆவது மேயா்: 333 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியின் 49-ஆவது மேயராகவும், பட்டியலின சமுதாயத்தின் முதல் பெண் மேயராகவும் ஆா்.பிரியா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா். இதற்கு முன்பாக, 45 மேயா்கள் மன்ற உறுப்பினா்களால் மறைமுகமாகவும், 2 போ் (ஸ்டாலின் 2 முறை, சைதை துரைசாமி ஒருமுறை) மக்களால் 3 முறை நேரடியாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை மேயருக்கான தோ்தல்: பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயருக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதில், 169 -ஆவது வாா்டு கவுன்சிலரான மு.மகேஷ்குமாா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். மேயருக்கான தோ்தல் நடைமுறைகளே துணை மேயருக்கும் பின்பற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com