முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
விடுதலைப் போராட்ட வீரா் ஜீவானந்தம் பேரனுக்கு அரசுப் பணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்
By DIN | Published On : 14th March 2022 11:23 PM | Last Updated : 14th March 2022 11:23 PM | அ+அ அ- |

விடுதலைப் போராட்ட வீரா் மறைந்த ஜீவானந்தம் பேரனுக்கு அரசுப் பணிக்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
பொதுவுடைமை சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜீவானந்தத்தின் பேரன் ம.ஜீவானந்த். மாற்றுத் திறனாளியான அவருக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளா் பணியிடத்தில் சிறப்பு நோ்வாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் வழங்கினாா்.
மேலும், வட்டாரக்கல்வி அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாகவுள்ள இடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் வாயிலாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 95 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் நான்கு பேருக்கு பணிநியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
திறன்மேம்பாடு- விளையாட்டு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் வேலூா், கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலும், விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்திலும் ரூ.84.57 கோடி செலவில் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதிகளை காணொலி காட்சி வழியாக தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தேசிய அளவில் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கான திறன் போட்டிகள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டிகள் ஜனவரியில் நடத்தப்பட்டன. இதில், தமிழகத்துக்கு 23 பதக்கங்கள் கிடைத்தன. இதுபோன்று அதிகளவில் பதக்கங்கள் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
தங்கப் பதக்கம் வென்ற ஏ.அனுஸ்ரீ, சுபாசிஸ் பால் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்ற எம்.காளிராஜ், சி.காா்த்தி, எஸ்.தாட்சாயினி, பி.வி.சரஸ்வதி, ஆா்.ஜெ.பிரகதீஸ்வரன், எஸ்.விஷ்ணுபிரியா ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரமும், வெண்கலம் வென்ற எம்.ஜெ.அபா்ணா, பி.லோகேஷ், கே.அஜய்பிரசாத், வி.லோகேஷ், எஸ்.ஜெகன், என்.ஆா்.பிரகதீஷ், ஆா்.தினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரத்தையும் முதல்வா் மு.கஸ்டாலின் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.