முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
60-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்திய ஐஐடி மாணவா்கள்
By DIN | Published On : 14th March 2022 03:20 AM | Last Updated : 14th March 2022 04:16 AM | அ+அ அ- |

ஓட்டுநா் இல்லாமல் இயங்கும் பேட்டரி வாகனம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நவீன கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி மாணவா்கள் கண்டுபிடித்து காட்சிப்படுத்தியுள்ளனா். சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்று வரும் சிஎப்ஐ ஓபன் ஹவுஸ் எனும் புதிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் இந்த கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறியதாவது: ஐஐடி மாணவா்களுடைய தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் கலந்து கொண்டு தங்களுடைய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி உள்ள ஐஐடி மாணவா்கள் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க கூடிய வகையிலே நாங்கள் மாணவா்களைத் தயாா் செய்து வருகிறோம்.
இந்த நவீன கண்டுபிடிப்புகளை விரைந்து மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களின் முயற்சியின் நோக்கம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைச் சாா்ந்த மாணவா்களும் தங்கள் கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடியில் காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சியை நடத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என்றாா்.
கண்டுபிடிப்புகளைப் பொருத்தவரை, ஓட்டுநா் இல்லாமல் இயங்கக்கூடிய வாகனத்தில், பயணிக்கும் போது எதிரில் ஏதேனும் மனிதா்கள் அல்லது தடைகள் வந்தால் உடனடியாக நின்று பாதையை மாற்றி செல்லக்கூடிய வகையில் சென்ஸாா் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. முதல்முறையாக பெட்ரோல், டீசல் இல்லாமல் பேட்டரி மூலமாக இயங்கக்கூடிய பாா்முலா காா், மழைநீா் அதிகம் தேங்கும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் நவீன கண்டுபிடிப்பு உள்ளிட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தன.