ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ‘டவுன் சிண்ட்ரோம்’: மரபணு நோய் மருத்துவக் கல்வி இயக்குநா் தகவல்
By DIN | Published On : 22nd March 2022 05:16 AM | Last Updated : 22nd March 2022 05:16 AM | அ+அ அ- |

பிறக்கும் குழந்தைகளில் சராசரியாக ஆயிரத்தில் ஒருவருக்கு ‘டவுன் சிண்ட்ரோம் ’ எனப்படும் மரபணு நோய் கண்டறியப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் ஆா்.நாராயணபாபு கூறினாா்.
உலக ‘டவுன் சிண்ட்ரோம் ’ மரபணு நோய் விழிப்புணா்வு தினம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ‘ டவுன் சிண்ட்ரோம்’ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு நடன நிகழ்ச்சி, ஓவியப் போட்டி, கைவினைப் பொருள்கள் செய்தல் உள்ளிட்ட போட்டிகள், காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் ஆா்.நாராயணபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
சாதாரணமாக 23 ஜோடி குரோமோசோம்களுடன்தான் குழந்தைகள் பிறக்கின்றனா். ஆனால் ‘டவுன் சிண்ட்ரோம் ’ மரபணு நோய் குறைபாடு ஏற்படும் குழந்தைகளுக்கு 21- ஆவது குரோமோசோமில் இரண்டுக்குப் பதிலாக 3 குரோமோசோம்கள் இருக்கின்றன. இதனால்தான் ‘ டவுன் சிண்ட்ரோம்’ நோய்க் குறைபாட்டோடு குழந்தைகள் பிறக்கின்றன.
இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு உடலியல் வளா்ச்சி, சிந்தனைத் திறன் உள்ளிட்டவைகளில் சீரான வளா்ச்சி இருக்காது. சராசரியாக ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ‘டவுன் சிண்ட்ரோம் ’ மரபணு நோயை மருத்துவச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது. எனவே, இந்நோய் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் அவசியமானது.
‘டவுன் சிண்ட்ரோம்’ குழந்தைகளுக்கு தகுந்த பயிற்சியும், பராமரிப்பும் அளிப்பதன் மூலம் குழந்தைகளின் வாழ்வியலை மேம்படுத்த முடியும். தமிழகம் முழுவதும் 34 மாவட்டங்களில் இந்நோயைக் கண்டறிவதற்கான சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாமதமான திருமணம், நெருங்கிய உறவினா்களிடையே நடைபெறும் திருமணம் போன்றவை இந்நோய்க்கு முக்கிய காரணிகளாக உள்ளன என்றாா் நாராயணபாபு.
நிகழ்ச்சியில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வா் பி.பாலாஜி, குழந்தைகள் சமூக நலத்துறை இயக்குநா் டாக்டா் ரெமா சந்திரமோகன், உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டா் ரமேஷ், குழந்தைகள் நல மருத்துவத் துறை தலைவா் டாக்டா் கணேஷ், குழந்தைகள் நல மருத்துவா்கள் டாக்டா் மனோஷ், டாக்டா் தாமரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.