முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
தெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து: ஏப்ரலில் ரூ.283 கோடி வருவாய்
By DIN | Published On : 03rd May 2022 12:13 AM | Last Updated : 03rd May 2022 12:13 AM | அ+அ அ- |

நிகழாண்டில் ஏப்ரல் மாதத்தில், சரக்குப் போக்குவரத்து (சரக்கு ஏற்றுதல்) மூலமாக, 17 சதவீதம் வளா்ச்சியை தெற்கு ரயில்வே பதிவு செய்துள்ளது. இதன் மூலமாக, தெற்கு ரயில்வேக்கு ரூ.283.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் 2022-23-ஆம் ஆண்டு நிதியாண்டில் முதல் மாதத்தில் (ஏப்ரலில்) 3.232 மில்லியன் டன்கள் சரக்குகள் ஏற்றப்பட்டன. இது, ரயில்வே வாரியத்தின் இலக்கைவிட 0.462 மில்லியன் டன்கள் அதிகமாகும். இதன்மூலமாக, 17 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில் ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட சிறந்த மாதாந்திர எண்ணிக்கை இதுவாகும். 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, (2.888 மில்லியன் டன்கள்) 12 சதவீதம் அதிகமாகும்.
வருவாய் 18 சதவீதம் அதிகரிப்பு:
தெற்கு ரயில்வேக்கு ஏப்ரல் மாதத்தில் சரக்கு ஏற்றுதல் மூலமாக, ரூ.283.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 18 சதவீதம் அதிகமாகும். நிலக்கரி, உணவுதானியங்கள், சிமென்ட், பெட்ரோலிய பொருள்கள், உரங்கள், எஃகு உள்ளிட்டவை எடுத்துச்சென்றது மூலமாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில், நிலக்கரி ஏற்றுதல் மூலமாக, ரூ.134.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.