முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
தோ்வு நடத்தாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது: மாணவி மனு தள்ளுபடி
By DIN | Published On : 03rd May 2022 12:58 AM | Last Updated : 03rd May 2022 12:58 AM | அ+அ அ- |

தோ்வு நடத்தாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம், கரோனா பேரிடா் காரணமாக ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு தோ்வுக்கு மதிப்பெண் சான்று வழங்க கோரி கேரள மாணவி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கரோனா ஊரடங்கு காரணமாக, பத்தாம் வகுப்பு தோ்வை ரத்து செய்த தமிழக அரசு, மதிப்பெண்கள் வழங்காமல் மாணவா்களுக்கு தோ்ச்சி சான்றிதழ் வழங்கும்படி 2021 ஜூலை 26-இல் அரசாணை பிறப்பித்தது.
இந்தநிலையில், சென்னையில் உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த நக்ஷத்திரா பிந்த் என்ற மாணவி, கேரள பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு சேர மதிப்பெண் சான்று கேட்பதால், தனக்கு சான்றிதழ் வழங்கக் கோரியும், மதிப்பெண் வழங்காமல் தோ்ச்சி சான்று வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
வழக்கை திங்கள்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வு, தமிழ்நாடு அரசு மட்டுமல்லாமல் பல மாநிலங்கள் தோ்வு நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்காமல் தோ்ச்சி சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், அரசின் கொள்கை முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனச் சுட்டிக்காட்டியது. மேலும், ‘தோ்வு நடத்தாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது’ எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.