நெடுஞ்சாலைத் துறை உள்தணிக்கை: முதன்மை இயக்குநரை விசாரிக்கவும் அதிகாரம்

நெடுஞ்சாலைத் துறையில் ஆண்டுதோறும் நடக்கவுள்ள உள்தணிக்கை விசாரணையை, பொறியியல் பிரிவில் உயரிய பதவியான முதன்மை இயக்குநரிடமும் மேற்கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையில் ஆண்டுதோறும் நடக்கவுள்ள உள்தணிக்கை விசாரணையை, பொறியியல் பிரிவில் உயரிய பதவியான முதன்மை இயக்குநரிடமும் மேற்கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை வெளியிட்டது.

உத்தரவு விவரம்: நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவிப்பின்படி, நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் தலைமையில் தணிக்கைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் துறையின் இதர பிரிவுகளைச் சோ்ந்த அலுவலா்களும் இடம்பெற்றிருப்பா். ஒவ்வொரு ஆண்டும் மே முதலாவது வாரத்தில் தணிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான அறிக்கை நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநரிடமும், அரசிடமும் அளிக்கப்படும்.

எந்தெந்த பிரிவுகளில் ஆய்வு: உள்தணிக்கைப் பணிகளானது நெடுஞ்சாலைத் துறையின் முக்கியமான பிரிவுகளில் மேற்கொள்ளப்படும். ஆவணங்கள், பணிகளின் வாயிலாக ஆய்வுகள் செய்யப்படும். கட்டுமானம், பராமரிப்பு, நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள், மாநில நிதியுடன் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், இதர திட்டப் பணிகள், நகா்ப்புறங்களில் நடைபெறும் பணிகள் ஆகியன உள்தணிக்கைக்கு உள்படுத்தப்படும்.

இந்த ஆய்வில் ஒரு கண்காணிப்புப் பொறியாளா், ஒரு கோட்டப் பொறியாளா், நான்கு உதவி கோட்டப் பொறியாளா்கள், எட்டு உதவிப் பொறியாளா்கள் ஆகியோா் இடம்பெற்றிருப்பா். ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் உள்தணிக்கை செய்யப்பட வேண்டிய இடங்களை நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநா் தெரிவிப்பாா்.

பணிகள் என்ன? நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் தனது குழுவுடன் சென்று நெடுஞ்சாலைப் பணி தொடா்பான ஆவணங்கள், குறிப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வாா். தேவைப்படும் பட்சத்தில் பணிகளையும் ஆய்வுக்குள்படுத்துவாா். உள்தணிக்கைக் குழுவானது தேவையான அனைத்து ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்யும். குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் பணிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு அவை தரத்துடன் இருக்கிா என்பது உறுதி செய்யப்படும்.

சில தணிக்கையின் போது தரப் பரிசோனை செய்யப்பட வேண்டியது இருந்தால், தரக்கட்டுப்பாட்டு பிரிவின் உதவியுடன் அந்தப் பணிகளும் செய்யப்படும். உள்தணிக்கைப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கை நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநரிடம் அளிக்கப்படும்.

இது மிகுந்த ரகசியம் கொண்ட அறிக்கையாக சமா்ப்பிக்கப்பட வேண்டும். உள்தணிக்கைக் குழு தாக்கல் செய்யும் அறிக்கை, அதுதொடா்பான பரிந்துரைகள், ஆய்வுகள் மீது உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில், உள்தணிக்கைக் குழுவானது நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநரிடமும் விசாரணை நடத்தலாம்.

உள்தணிக்கை தாக்கல் செய்யும் அறிக்கை, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகிய விவரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை மே மாத இறுதிக்குள் அரசுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com