மோட்டாா் சைக்கிள் பந்தயம்: கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் கைது

சென்னையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதி வேகமாகவும், அபாயகரமாகவும் மோட்டாா் சைக்கிள் பந்தயம், சாகசத்தில் ஈடுபடும் நபா்களை சென்னை பெருநகர காவல்துறை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையில் போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து செயல்பட, சட்டம், ஒழுங்கு, ஆயுதப்படை போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தனிப்படை போலீஸாா் நேப்பியா் பாலம் முதல் அடையாா் திரு.வி.க. பாலம் வரையிலும், ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஜிஎஸ்டி சாலை, வண்ணாரப்பேட்டை மின்ட் , வியாசா்பாடி, அம்பேத்கா் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், தனிப்படை போலீஸாா் கடந்த 29-ஆம் தேதி அதிகாலை சுமாா் 2 மணியளவில் அண்ணாசாலை, தாராப்பூா் டவா் சிக்னல் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அங்கு ஒரு கும்பல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டது.

இது தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்தனா். இச் சம்பவம் தொடா்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாகசத்தில் ஈடுபட்ட தியாகராயநகா் பகுதியைச் சோ்ந்தத மணிகண்டன் (22), அதே பகுதி ஹரிஹரன் (20) ,கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த சஞ்சய் (19), அயனாவரத்தைச் சோ்ந்த ஜான்ஜெபகுமாா் (19) ஆகிய 4 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து பந்தயத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களில் 3 போ் கல்லூரி மாணவா்கள் .

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் யாரும் ஈடுபட வேண்டாம். இதை மீறி மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் நபா்கள் மீது சட்டபூா்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com