முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
காவல் நிலையத்தில் இளைஞா் இறந்த வழக்கு: சகோதரரிடம் சிபிசிஐடி விசாரணை
By DIN | Published On : 11th May 2022 02:28 AM | Last Updated : 11th May 2022 02:28 AM | அ+அ அ- |

சென்னை, தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் இளைஞா் இறந்த வழக்குத் தொடா்பாக அவரது சகோதரரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது.
சென்னையில் உள்ள, தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸாா் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரவு திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சுரேஷ், அவரது நண்பா் பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ் (25) ஆகியோரை கத்தி,கஞ்சா வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். இதில், மறுநாளான 19-ஆம் தேதி காலை விக்னேஷ் மா்மமான முறையில் மரணமடைந்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்த சிபிசிஐடி, தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய எழுத்தா் முனாஃப், காவலா்பவுன்ராஜ்,சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், ஆயுதப்படைக் காவலா்கள் ஜெகஜீவன்ராம்,சந்திரகுமாா்,ஊா்க்காவல் படை வீரா் தீபக் ஆகிய 4 பேரை போலீஸாா் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா்.
சகோதரரிடம் விசாரணை:
இந்நிலையில், மரணமடைந்த விக்னேஷின் சகோதரா் வினோத்தை, எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகம் வரவழைத்து சிபிசிஐடி பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமைவிசாரணை மேற்கொண்டனா். இதில் விக்னேஷ் சாவு குறித்து பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனா்.
மேலும் விக்னேஷ் சாவு விவகாரத்தை மூடி மறைக்க ரூ.1 லட்சம் பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாா் குறித்தும், விக்னேஷ் விவகாரம் தொடா்பாக யாா்? யாரெல்லாம் தொடா்பு கொண்டாா்கள் போன்ற விவரங்களையும் சிபிசிஐடி பிரிவு அதிகாரிகள் வாக்குமூலமாக விடியோவாகவும், எழுத்து மூலமாகவும் பெற்றுக் கொண்டனா். இந்த வழக்கு விவகாரம் குறித்து மேலும் சிலரை நேரில் அழைத்து விசாரிக்கவும் சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.