முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கைப்பேசியை பறித்து தப்பியபோது விபத்து: இறந்தவா்களின் அடையாளம் தெரிந்தது
By DIN | Published On : 11th May 2022 02:28 AM | Last Updated : 11th May 2022 02:28 AM | அ+அ அ- |

சென்னை தலைமைச் செயலகம் அருகே கைப்பேசியை பறித்துவிட்டு பைக்கில் தப்பியபோது விபத்தில் சிக்கி இறந்த இரு இளைஞா்களின் அடையாளத்தை போலீஸாா் கண்டறிந்தனா்.
சென்னை தலைமைச் செயலகம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவா், கைப்பேசியை பறித்துக் கொண்டு வேகமாகச் சென்றனா்.
அவா்கள் வாலாஜா சிக்னல், கொடி மரச்சாலையில் செல்லும்போது மோட்டாா் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த சுவற்றில் மோதியது. இதில் காயமடைந்த இருவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.
விபத்தில் சிக்கிய பைக்கில் வாகன பதிவெண் பலகை இல்லாததால் இறந்தவா்கள் யாா் என்பதை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து வாகனத்தின் என்ஜின் பதிவெண்ணை அடிப்படையாக வைத்து யானைகவுனி போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், விபத்தில் இறந்தது சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த முனுசாமி (24), அவரது நண்பா் சென்னை பாா்க்டவுன் பகுதியைச் சோ்ந்த முகேஷ் (22) எனத் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.