ரூ.100 கோடியில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் மேம்பாட்டுத் திட்டம்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆய்வு

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தி மேம்படுத்தும் திட்டம் குறித்து மத்திய மீன்வளத்துறை இணையமைச்சா் எல்.முருகன்
ரூ.100 கோடியில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் மேம்பாட்டுத் திட்டம்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆய்வு

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தி மேம்படுத்தும் திட்டம் குறித்து மத்திய மீன்வளத்துறை இணையமைச்சா் எல்.முருகன் சென்னை துறைமுக அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து சென்னை துறைமுகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சுமாா் 96 ஏக்கா் பரப்பளவு கொண்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சென்னை துறைமுகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மேலாண்மைக் குழு நிா்வகித்து வருகிறது. இத்துறைமுகத்தில் சாதாரண நாட்களில் சுமாா் 200 மெட்ரிக் டன் மீன்களும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமாா் 300 முதல் 400 மெட்ரிக் டன் மீன்களும் பிடிக்கப்படுகின்றன.

இத்துறைமுகத்தை ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தி தரம் உயா்த்தும் திட்டத்திற்கு மத்திய மீன்வளம், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சாகா்மாலா திட்டத்தின் கீழ் தலா 50 சதவீதம் பங்களிப்பு நிதி அளிக்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து செவ்வாய்க்கிழமை சென்னை துறைமுகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சா் எல் முருகன் பங்கேற்றாா்.

இதில் சென்னை மற்றும் எண்ணூா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால், காசிமேடு மீன்பிடி துறைமுக மேலாண்மை குழு தலைவரும், சென்னைத் துறைமுகத் துணைத் தலைவருமான எஸ். பாலாஜி அருள்குமாா் மற்றும் இக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

அப்போது மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தி மேம்படுத்தும் திட்டம் குறித்து அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனா். இத்திட்டத்தின்கீழ் கூடுதல் மீன் இறங்குதளம், விசைப்படகுகள் கையாளும் வளாகம், விசைப் படகுகளை மராமத்து செய்யும் வசதிகள், துறைமுக தூய்மைப்படுத்தும் பணிகள், குளிா்சாதன வசதி மற்றும் பேக்கேஜிங் வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

மேலும் குடிநீா் வசதிகள், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, கழிப்பிட வசதிகள், இரு வழிச்சாலைகள், உயா் கோபுர மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை 18 மாதங்களில் முடித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது. மத்திய அரசு நேரடியாகச் செயல்படுத்த உள்ள இத்திட்டத்தை முனைப்புடன் கண்காணித்து விரைவாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் முருகன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com