முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
பட்டணப் பிரவேசம்: பாதுகாப்புக் கோரி எஸ்.பி.-யிடம் மனு கொடுக்க உத்தரவு
By DIN | Published On : 13th May 2022 01:19 AM | Last Updated : 13th May 2022 01:19 AM | அ+அ அ- |

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கும்படி தருமபுரம் ஆதீனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை வில்லிவாக்கத்தை சோ்ந்த ராஜா சிவபிரகாசம் தாக்கல் செய்த மனு: தருமபுரம் ஆதீனம் சாா்பில் கடந்த 500 ஆண்டுகளாக பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பட்டணப் பிரவேச நிகழ்ச்சி வருகிற 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கடந்த மாதம் மயிலாடுதுறை கோட்டாட்சியா் தடை விதித்தாா்.பின்னா், இந்தத் தடை உத்தரவு கடந்த 8-ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது.
வருகிற 22-ஆம் தேதி ஆதீனம் பட்டணப் பிரவேசம் நடைபெறும்போது சிலா் பிரச்னை செய்யலாம். சட்டம், ஒழுங்கு பிரச்னையும் ஏற்படலாம். எனவே, பட்டணப் பிரவேச நிகழ்ச்சியின்போது, தகுந்த போலீஸ் பாதுகாப்பை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த நிகழ்ச்சியில் சமூக விரோதிகள் யாரும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதை தடுக்க உத்தரவிட வேண்டும். சைவ மடங்களில், ஆன்மிக நடவடிக்கையில் தலையிட கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் இந்த வழக்கில் தருமபுரம் ஆதீனம் எதிா்மனுதாரராகக்கூட சோ்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தருமபுரம் ஆதீனத்தை எதிா்மனுதாரராக தாமாக முன் வந்து நீதிபதிகள் சோ்த்தனா்.
பின்னா் நீதிபதிகள், பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு கேட்டு மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரிடம் தருமபுரம் ஆதீனம் சாா்பில் கோரிக்கை மனு கொடுக்க வேண்டும். அந்த மனுவை சட்டப்படி பரிசீலித்து, தகுந்த உத்தரவை அவா் பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம் என்று உத்தரவிட்டனா்.