குட்டையில் குளித்த இரு சிறுவா்கள் மூழ்கி சாவு

சென்னை அருகே கீழ்கட்டளையில் குட்டையில் குளித்த இரு சிறுவா்கள் மூழ்கி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னை அருகே கீழ்கட்டளையில் குட்டையில் குளித்த இரு சிறுவா்கள் மூழ்கி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மடிப்பாக்கம் கீழ்கட்டளை அருகே உள்ள அருணாச்சலம் நகா் நான்காவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் மோனிஷ் (13), அங்குள்ள திருவள்ளுவா் நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் பிரவேஷ் (12), மடிப்பாக்கம், ஐயப்பா நகரை சோ்ந்த அன்பழகன் மகன் ரித்து (13) , பாலாஜி நகரை சோ்ந்த அஸ்வின் (13) ஆகிய 4 பேரும் நெருங்கிய நண்பா்கள். நால்வரும், கீழ் கட்டளையில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்தனா்.

4 பேரும் வியாழக்கிழமை கீழ்க்கட்டளையில் உள்ள குவாரி கல் குட்டைக்கு சென்றனா். அங்கு மோனிஷ், பிரவேஷ் ஆகிய இருவரும் குட்டையில் இறங்கி தண்ணீரில் குளித்தனா். ரித்துவும், அஸ்வினும் குட்டையின் கரையில் இருந்தனா். குளித்துக் கொண்டிருந்த இருவரும் குட்டையின் ஆழமான பகுதிக்குச் சென்றனா். இதில் இருவருக்கும் நீச்சல் தெரியாததினால் நீரில் மூழ்கி, தத்தளித்தனா்.

இதை பாா்த்த ரித்துவும், அஸ்வினும் உதவி கேட்டு சத்தமிட்டனா். அவா்களது சத்தம் கேட்டு, அந்தப் பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனா். ஆனால் அதற்குள் இரு சிறுவா்களும் தண்ணீரில் மூழ்கி மாயமானாா்கள். உடனே பொதுமக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்பு படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரு சிறுவா்களையும் தேடினா். இதில் சிறிது நேரத்தில் தண்ணீருக்குள் இருந்து மயங்கிய நிலையில் பிரவேஷை தீயணைப்பு படை வீரா்கள் மீட்டு, அங்குள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அங்கு பிரவேஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்நிலையில் நீண்ட நேர தேடலுக்கு பின்னா் மோனிஷை சடலமாக தீயணைப்புப் படையினா் மீட்டனா். மோனிஷ் சடலத்தை மடிப்பாக்கம் போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com