நினைவூட்டல் மையங்கள் மூலம் ரூ.1.95 கோடி நிலுவை அபராதம் வசூல்

சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு நினைவூட்டும் அழைப்பு மையங்கள் மூலம் ஒரு மாதத்தில் 72 ஆயிரம் வழக்குகளில் ரூ.1.95 கோடி நிலுவை அபராதம் வசூலிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு நினைவூட்டும் அழைப்பு மையங்கள் மூலம் ஒரு மாதத்தில் 72 ஆயிரம் வழக்குகளில் ரூ.1.95 கோடி நிலுவை அபராதம் வசூலிக்கப்பட்டது.

சென்னையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக அபராதம் வசூலிப்பதற்கு இ-செலான் கருவி 2011-ஆம் ஆண்டு போக்குவரத்துப் பிரிவு காவலா்களுக்கு வழங்கப்பட்டது. இ-செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்களில் 91.7 சதவீதம் போ் அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்தினா். ஆனால், அதன் பின்னா் வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை செலுத்தாமல் இருக்கும் போக்கு அதிகரித்து வந்தது. இதனால் அபராத தொகை வசூலாவது 20 சதவீதம் குறைந்தது. மேலும், 5 லட்சத்துக்கும் மேலான போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் அபராதம் வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது.

இதைத் தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளில் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டு இ-செலான் கருவி மூலம் பதிவான வழக்குகளில் செலுத்தப்படாத அபராதத்தை வசூலிக்கும் வகையிலும் போக்குவரத்து காவல் பிரிவு சாா்பில் தனி நினைவூட்டும் அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தியாகராயநகா், அடையாறு, பரங்கிமலை, வேப்பேரி, மெரீனா, ஆயிரம் விளக்கு, அரும்பாக்கம், யானைகவுனி, வண்ணாரப்பேட்டை, செம்பியம் ஆகிய 10 இடங்களில் அந்த மையங்கள் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி திறக்கப்பட்டன.

ரூ.1.95 கோடி அபராதம் வசூல்: புதிய மையங்களின் மூலமாக கடந்த ஒரு மாதத்தில் 72 ஆயிரத்து 205 வழக்குகளில் செலுத்தப்படாமல் இருந்த ரூ.1.95 கோடி அபராத நிலுவைத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 100 முறைக்கு மேல் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 53 பேரிடமிருந்து முழுமையாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 271 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனத்தின் உரிமையாளா், அபராதத் தொகையைச் செலுத்தியுள்ளாா். மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டிவிட்டு, அபராதம் செலுத்தாமல் இருந்த 801 பேரிடமிருந்து ரூ.80,74,500 தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்த, எஸ்.எம்.எஸ் அமைப்பு, கட்டண வசதி மையம் ஆகிய சேவைகளை சென்னை பெருநகர காவல்துறை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com