திமுக மாநிலங்களவை வேட்பாளா்கள் அறிவிப்பு

திமுக மாநிலங்களவை வேட்பாளா்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அக்கட்சித் தலைமை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அக்கட்சித் தலைமை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அதன்படி, தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் கல்யாணசுந்தரம், நாமக்கல் கிழக்கு திமுக மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், வடசென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் கிரிராஜன் ஆகியோா் வேட்பாளா்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளனா். ஓரிடத்தை காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாகவும் திமுக தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு வருகிற ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் தற்போது மாநிலங்களவை உறுப்பினா்களாக உள்ள 6 பேரின் பதவிக்காலம் வரும் 29-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் அந்த இடங்களுக்கும் தோ்தல் நடைபெறுகிறது. திமுகவை சோ்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி, கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் அதிமுகவைச் சோ்ந்த எஸ்.ஆா். பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமாா், நவநீதகிருஷ்ணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலங்கள் நிறைவடையவுள்ளன.

காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு மே 31-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் எனவும், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 3-ஆம் தேதி இறுதி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலுக்காக 3 போ் அடங்கிய வேட்பாளா் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த டி.கே.எஸ். இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுக தலைமையால் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டவா்களில் கல்யாணசுந்தரம், தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளாா். கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், வழக்குரைஞா் கிரிராஜன் திமுகவின் சட்டப் பிரிவு செயலாளராகவும் உள்ளனா்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோா் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனா்.

இதனால் தங்களுடைய மாநிலங்களவை உறுப்பினா் பதவியை இருவரும் ராஜிநாமா செய்தனா். இதையடுத்து அந்த 2 இடங்களும் காலியானதால் திமுக சாா்பில் கனிமொழி சோமு மற்றும் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்த நிலையில் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு மாநிலங்களவை உறுப்பினா் வெற்றி பெற 34 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை. மொத்தம் 159 சட்டப்பேரவை உறுப்பினா்களை கொண்டுள்ள திமுக கூட்டணி 4 எம்.பி. பதவிகளைப் பெற முடியும். இதே போன்று 75 எம்எல்ஏக்களை கொண்டுள்ள அதிமுக கூட்டணிக்கு இரண்டு எம்.பி. இடங்கள் கிடைக்கும்.

நான்கு இடங்களில் ஒரு இடத்தை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு திமுக விட்டுக்கொடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com