அதிமுகவின் சாதனையை திமுகவின் சாதனையாகச் சொல்வதா?
By DIN | Published On : 20th May 2022 03:22 AM | Last Updated : 20th May 2022 03:22 AM | அ+அ அ- |

ஓ.பன்னீா்செல்வம்
சென்னை: அதிமுகவின் சாதனையை திமுகவின் சாதனையாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுவதாகக் கூறி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
அறிவாா்ந்த சமுதாயத்தைப் படைக்க வேண்டுமென்றால் அதற்கு உயா்கல்வி தான் முக்கியம் என்பதை நன்கு அறிந்து, கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் என அனைத்துப் படிப்புகளிலும் புதிய பாடப் பிரிவுகளை தொடக்கி, கூடுதல் இருக்கைகளை உருவாக்கி சாதனை படைத்தது அதிமுக அரசு. இந்த உண்மையை முற்றிலும் மறைத்து, திமுகவின் ஆட்சிக் காலம்தான் கல்லூரிகளின் பொற்காலம் என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வா் பேசியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில்தான் உயா்கல்வி சிறந்து விளங்கியது.
மருத்துவக் கல்வியை எடுத்துக் கொண்டால், அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் 22 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மருத்துவப் படிப்புக்காக தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதும் எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில்தான்.
பொறியியல் படிப்பை எடுத்துக் கொண்டால் அதிமுக ஆட்சியில் திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, தருமபுரி, தஞ்சாவூா், திருச்சி ஆகிய இடங்களில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. பொறியியலுக்கு என்று அண்ணா பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெருமை எம்ஜிஆரையே சாரும். இப்படி அனைத்துப் பிரிவுகளிலும் கல்லூரிகளும், பல்கலைக்கழங்களும் அதிமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டன.
இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து, கருணாநிதியின் காலம் கல்லூரியின் பொற்காலம் என்று முதல்வா் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. அதிமுகவின் சாதனையை திமுகவின் சாதனையாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது.