கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஒப்படைப்பு
By DIN | Published On : 20th May 2022 04:52 AM | Last Updated : 20th May 2022 04:52 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்படுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 6 கட்டடங்கள் மற்றும் மனைகளில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டு நியாய வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. நியாய வாடகை செலுத்தாதவர்களின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆறு கட்டடங்களுக்கு நியாய வாடகை நிர்ணயக் குழுவின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட நியாய வாடகையைச் செலுத்த பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டும், அறிவிப்புகளை பெற்றுக் கொண்ட கட்டட வாடகைதாரர்கள் நியாய வாடகை மற்றும் நிலுவை வாடகைத் தொகைகளை செலுத்த முன்வரவில்லை.
எனவே, வாடகைதாரர்களின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆறு கட்டடங்களில் உள்ள வாடகைதாரர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, அவர்களை வெளியேற்றிட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 29 -ஆம் தேதி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளிலிருந்து 4 கடைகள் சீலிடப்பட்டன. மேலும் கடந்த புதன்கிழமை இரண்டு கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்றி சீலிடப்பட்டு சொத்துகளை திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பெறப்பட்ட சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.3 கோடியே 70 லட்சம் ஆகும். இந்த நடவடிக்கைககளில் கபாலீசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் த.காவேரி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.