உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான்: 7 பேரும் அப்பாவிகள் என்பதை ஏற்க முடியாது: டி.ஆர்.கார்த்திகேயன்

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான்: 7 பேரும் அப்பாவிகள் என்பதை ஏற்க முடியாது: டி.ஆர்.கார்த்திகேயன்

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான். அதேவேளையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் அப்பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்த வழக்கின் சிறப்பு புலனாய்வுக் குழு தலைவராக இருந்த டி.ஆர்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரான டி.ஆர்.கார்த்திகேயன் கூறியது: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான். நான் இந்தத் தீர்ப்பை மதிக்கிறேன். ஆனால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பல போராட்டங்களைச் சந்தித்து தடயங்களைச் சேகரித்தோம். 

இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, அதை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகளின் நீண்ட விசாரணைக்கு பின்னர், குற்றவாளிகள் அப்பாவிகள் இல்லை எனத் தீர்ப்பளித்தனர்.

நாட்டுக்கு எதிராக நடைபெற்ற சதி: ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை ஒரு சாதாரண கொலையாக மட்டும் பார்க்க முடியாது. 

அதேபோல ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு எதிரானதாகவோ அல்லது அந்த சம்பவத்தில் இறந்தவர்களுக்கு எதிரானதாகவோ கருத முடியாது. இது  நாட்டுக்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய சதிச் செயல். 

இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த 9 பேர் உள்பட 17 பேர் இறந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த இக்பால், தனது பிறந்த நாளன்று இறந்தார்.

ராஜீவ் காந்தி ஒரு நாட்டின் பிரதமராக இருந்து, அனைத்து விஷயங்களிலும் தனது பங்களிப்பை செய்தார். அவர் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தையே செய்தார். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ராஜீவ் காந்தி எதுவும் செய்யவில்லை.

 ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தின் சதி, ஈழத்தில் எங்கு, எப்படி திட்டமிடப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. இந்த வழக்கு விசாரணையை நடத்துவது தொடர்பாக சிபிஐ இயக்குநர் நடத்திய கூட்டத்தில், அதிகாரிகள் யாரும் வழக்கின் விசாரணையை நடத்த முன் வரவில்லை.

வெளிப்படையுடன் விசாரணை: அப்போது ஹைதராபாதில் இருந்த என்னை (டி.ஆர்.கார்த்திகேயன்) வழக்கு விசாரணையை ஏற்று நடத்தும்படி பரிந்துரை செய்யப்பட்டது. நாட்டுக்குச் செய்யும்  கடமை என அந்தச் சவாலான பணியை நான் ஏற்றுக் கொண்டேன். அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொலை வழக்கில் மர்மம் நீடிப்பது போன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் மர்மம்தான் நீடிக்கும் எனச் சிலர் கருதினர்.  

ஆனால் நானும், எனது குழுவினரும் வழக்கின் விசாரணையை மிகுந்த வெளிப்படையுடன் செய்தோம்.  விசாரணையின்போது கிடைத்த தகவல்களைக் கொண்டும், அறிவியல் தடயங்கள் மூலமும் எங்களது திறமையின் மூலமும் குற்றவாளிகளைக் கண்டறிந்தோம். விசாரணை சுதந்திரமாக நடைபெற்றது. விசாரணையில் எந்தத் தனி நபரின் குறுக்கீடோ அல்லது அரசியல் குறுக்கீடோ இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com