சென்னை விமான நிலையத்தில் லேசர் ஒளி பட்டதால் விமானி தடுமாற்றம்

சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை விமானம் தரையிறங்க தாழ்வாக பறந்தபோது, விமானியின் கண்களில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் தடுமாற்றம் ஏற்பட்டது.

சென்னை:  சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை விமானம் தரையிறங்க தாழ்வாக பறந்தபோது, விமானியின் கண்களில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் தடுமாற்றம் ஏற்பட்டது. எனினும், அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு, 146 பயணிகளுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். 
இலங்கை கொழும்பு நகரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வியாழக்கிழமை அதிகாலை சென்னையில் தரை இறங்குவதற்காக 146 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. அந்த விமானம் சென்னை விமானநிலையத்தில் தரை இறங்குவதற்காக உயரத்தைக் குறைத்து தாழ்வாக பறக்கத்தொடங்கியது. அப்போது அந்த விமானத்தின் முன்பகுதியில் விமானியின் கேபினை நோக்கி சக்திவாய்ந்த லேசர் ஒளி பாய்ந்து அடித்தது.
அந்த லேசர் ஒளி, விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த விமானியின் கண்களுக்கு நேராக அடிக்கப்பட்டது. இதனால் விமானி நிலைகுலைந்து திணறினார். எனினும்  விமானி அதனை சமாளித்துக் கொண்டு, மிகவும் சாமார்த்தியமாக செயல்பட்டார்.  விமானத்தை மிகவும் பத்திரமாக சென்னை விமானநிலையத்தில் தரையிறக்கினார்.
இதனால் விமானத்தில் இருந்த 146 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் உட்பட 153 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். 
இதையடுத்து விமானி இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள், ரேடார் கருவிகள் மூலமாக எந்தப் பகுதியிலிருந்து ஒளி வந்தது என்று ஆய்வு செய்ததில் பழவந்தாங்கல் பகுதியிலிருந்து இந்த சக்திவாய்ந்த லேசர்  ஒளி வந்திருப்பது தெரியவந்தது.
 பழவந்தாங்கல் பகுதியில் உள்ள உயரமான கட்டடத்திலிருந்து சக்தி வாய்ந்த லேசர்  ஒளியை பீய்ச்சி அடித்துள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அலுவலர்களும் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே நடந்துள்ளன. அப்போது பரங்கிமலைப்பகுதியில் இருந்து லேசர் ஒளியை விமானத்தின் மீது அடிக்கும் சம்பவங்கள் 2 முறை நடந்துள்ளதுஅது சம்பந்தமாக போலீஸர் 2 பேரை கைது செய்தனர். தற்போது 5 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் அதைப் போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.இது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com