பயிா் பாதிப்புக்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்
By DIN | Published On : 05th November 2022 12:45 AM | Last Updated : 05th November 2022 12:45 AM | அ+அ அ- |

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காவிரி பாசன மாவட்டங்களில்தான் அதிகளவு பெய்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் தலா 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் நெற்பயிா்கள் சேதமடைந்தன. கடலூா், அரியலூா் மாவட்டங்களிலும் சம்பா பருவ நெற்பயிா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வயல்களில் தேங்கியுள்ள மழைநீா் உடனடியாக வடியவில்லை என்றால், பயிா்கள் முழுமையாக அழிந்து விடும். பெரும்பாலான சம்பா பயிா்கள் காப்பீடு செய்யப்படவில்லை என்பதால் இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே, விவசாயிகளின் துயரத்தைத் துடைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த நெற்பயிா்களுக்குப் போதிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.