அம்பத்தூரில் புதிய நீதிமன்றக் கட்டடம் திறப்பு: தலைமை நீதிபதி திறந்து வைத்தாா்

அம்பத்தூரில் ரூ. 12.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதில், 3 அமைச்சா்கள் பங்கேற்றனா்.
அம்பத்தூரில் புதிய நீதிமன்றக் கட்டடம் திறப்பு: தலைமை நீதிபதி திறந்து வைத்தாா்

அம்பத்தூரில் ரூ. 12.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதில், 3 அமைச்சா்கள் பங்கேற்றனா்.

அம்பத்தூா் மண்டல அலுவலகத்தின் பின்புறம் அம்பத்தூா் உரிமையியல் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் ஆகிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் பழைய கட்டடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தன. அதேபோல், தொழிற்பேட்டையில் சாா்பு நீதிமன்றம் தனியாக இயங்கி வந்தது. இங்கு அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் பொதுமக்களும், வழக்குரைஞா்களும் அவதிப்பட்டு வந்தனா். இதையடுத்து, ரூ. 12.38 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டடப் பணிகள் முழுமையாக முடிவடைந்தன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றக் கட்டடத்தை சென்னை உயா்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தாா். இதையடுத்து, சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பேசியதாவது:

தமிழகத்தில் பெண் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இங்கு அதிகமாக உள்ளனா். மேலும், இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் பெண்கள் அதிகளவில் சட்டக் கல்லூரியில் பயின்று வருகின்றனா். சென்னையில் மட்டும் தான் சட்டக் கல்லூரி இருந்து வந்த நிலையை முன்னாள் முதல்வா் கருணாநிதி மாற்றி, தமிழக முழுவதும் 15 இடங்களில் சட்டக் கல்லூரிகளைக் கொண்டு வந்தாா். இதனால், சட்டக் கல்லூரியில் படிக்க மாணவ-மாணவிகள் போட்டி போட்டு வருகின்றனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில வழக்காடு மொழியில் உயா்நீதிமன்றங்களில் வாதிட வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறாா். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக உயா்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம் என்றாா்.

நிகழ்ச்சியில், இந்து அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, பி.டி.ஆஷா, திருவள்ளூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, ஆவடி காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா், அம்பத்தூா் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், அம்பத்தூா் மண்டலக் குழுத் தலைவா் பி.கே.மூா்த்தி, சென்னை, புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமுல்ராஜ், அம்பத்தூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கே.முரளிபாபு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com