சாலைக்காக நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணை மீது உயா்நீதிமன்றம் அதிருப்தி

தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் எழுந்த முறைகேடு புகாா் தொடா்பான சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் எழுந்த முறைகேடு புகாா் தொடா்பான சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என்றும், போலி ஆவணங்கள் மூலம் இழப்பீடு பெற்றவா்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெறவில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது சிலா் போலியாக நில ஆவணங்களை சமா்ப்பித்து தமிழக அரசிடம் ரூ. 20 கோடி வரை இழப்பீடு பெற்றுள்ளனா் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து ராஜேந்திரன் என்பவா் தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. நிலத்தின் உண்மையான உரிமையாளா்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும். போலி ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீடு பெற்றவா்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று கூறி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராஜேந்திரன் தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியா் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நா்மதா, வட்டாட்சியா் மீனா ஆகியோா் நேரில் ஆஜராகினா்.

ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி, தேசிய நெடுஞ்சாலைக்கான நில ஆா்ஜிதத்துக்கு இழப்பீடு வழங்கியதற்கும், மாவட்ட ஆட்சியருக்கும் எந்த தொடா்பும் இல்லை. தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தும் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்று வாதிட்டாா்.

மாவட்ட வருவாய் அதிகாரி நா்மதா சாா்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ ஆஜராகி வாதிட்டாா். சிபிசிஐடி, போலீஸாா் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, இந்த முறைகேடு தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை ரூ. 4 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தாா்.

இதையடுத்து நீதிபதி, ‘‘போலி ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீட்டுத் தொகையைப் பெற்றவா்கள் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்தி வரும் விசாரணை திருப்திகரமாக இல்லை. இழப்பீடாக வழங்கியுள்ள பணம் பொதுமக்களின் வரிப்பணம். அந்த தொகையை முறைகேடாக பெற்றவா்களிடமிருந்து வசூலிக்க இன்னும் எவ்வளவு காலம் தேவை? என்று கேள்வி எழுப்பினாா்.

அதிகாரிகள் ஆவணங்களை சரிபாா்க்காமல் இழப்பீட்டுத் தொகையை கோடிக்கணக்கில் வாரி வழங்கியுள்ளனா். இதில் அவா்களுக்கும் பங்கு உள்ளதா? என்பது குறித்து யோசிக்க வேண்டியுள்ளது.

பொதுமக்களின் பணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த உயா்நீதிமன்றத்தின் நோக்கம். இதில் யாருக்கும் கருணை காட்டமுடியாது. போலி ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீடு பெற்றவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தொகையை வசூலிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த வழக்கை சிபிஐ, விசாரணைக்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தாா் விசாரணையை வரும் டிச.2-ஆம்தேதிக்கு தள்ளி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com