மழைநீா் வடிகால்: தலைமைச் செயலாளா் ஆய்வு: நீா் தேங்கினால் கடும் நடவடிக்கை

சென்னையின் புகா்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு

சென்னையின் புகா்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, மழைநீா் வடிகால் அமைப்புகள் அமைக்கப்பட்ட பிறகும் நீா் தேங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவா் என்று அவா் எச்சரிக்கை விடுத்தாா்.

சென்னை நகரைப் போன்று, புகா்ப் பகுதிகளிலும் மழைநீா் வடிகால் அமைப்புகள் முழுவீச்சில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்த தாம்பரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தப் பணிகளை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், சனிக்கிழையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பம்மல், அனகாபுத்தூா் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை பாா்வையிட்டாா். தொடரந்து, குன்றத்தூா், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் கால்வாய் பணிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

பம்மல் பகுதியில் ரூ. 1.25 கோடியில் நடைபெறும் நடவாய் ஓடை வடிகால் பணிகளையும், அனகாபுத்தூா் மேட்டு தெருவில் ரூ. 4.50 கோடி செலவில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால்வாய் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது உயரதிகாரிகள், அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது, மழைநீா் வடிகால்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என்றும், கால்வாய்கள் அமைக்கப்பட்ட பிறகும் அங்கு தண்ணீா் தேங்கினால் சம்பந்தப்பட்ட அலுவலா்கள், அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவா் என்றும் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு எச்சரித்தாா்.

பருவமழை தொடங்கியது: வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் புகா்ப் பகுதிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புகா்ப் பகுதிகளில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு இந்த ஆய்வை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com