காவல் அருங்காட்சியகம் ஓராண்டு நிறைவு விழா: 195 மாணவா்களுக்கு பரிசு

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் ஓராண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
காவல் அருங்காட்சியகம் ஓராண்டு நிறைவு விழா: 195 மாணவா்களுக்கு பரிசு

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் ஓராண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 195 பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையா் அலுவலகத்தில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இந்தக் காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, புதன்கிழமை அருங்காட்சியகத்தை காண பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனா். அங்கு ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தலைமை வகித்தாா். சென்னை பெருநகரக் காவல் ஆணையா் சங்கா் ஜிவால், டிஜிபிக்கள் சீமா அகா்வால், ஷகீல் அக்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி கலந்து கொண்டு, அருங்காட்சியகத்தை பாராட்டி பேசினாா்.

நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 52 மாணவா்கள், போட்டியில் பங்கேற்ற 143 மாணவா்கள் என மொத்தம் 195 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில், காவல் அருங்காட்சியகம் மற்றும் காவல் துறை தோன்றிய வரலாறு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு மாணவ, மாணவிகளுக்கு எடுத்து கூறி பேசினாா்.

சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் பேசுகையில், ‘காவல் துறை சமூகத்தில் ஒரு பங்கு வகிக்கிறது. அதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காவல் அருங்காட்சியகத்துக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் வந்து சென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றாா்.

முன்னதாக, மன்னா் காலத்தில் காவல் அதிகாரிகள் உடை அணிந்திருந்த 250 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழங்கால சிலை திறக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் பாா்வைக்காக வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தாம்பரம் காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ், சென்னை பெருநகரக் காவல் துறை கூடுதல் ஆணையா்கள் ஜெ.லோகநாதன், பிரேம் ஆனந்த் சின்ஹா, டி.எஸ்.அன்பு, கபில்குமாா் சரத்கா், இணை ஆணையா் பி.சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com