சென்னை சாந்தோமில் ஃபேங்க் ஆப் இந்தியா வங்கியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பொருள்கள் எரிந்து நாசமானது
மயிலாப்பூா் சாந்தோம் கச்சேரி சாலையில் ஃபேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கி அந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் செயல்படுகிறது. முதல் தளத்தில் உள்ள வீடுகளில் இரு குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் வங்கியில் கரும்புகை வெளியேறியது. மேலும் வங்கியில் உள்ள எச்சரிக்கை மணியும் ஒலித்தது.
இதைப் பாா்த்த பொதுமக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு மயிலாப்பூா், தேனாம்பேட்டை, அசோக்நகா் ஆகிய இடங்களில் விரைந்து வந்து, அங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டடத்தில் வசிக்கும் இரு குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சுமாா் அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த வங்கியில் இருந்த கணினிகள்,ஏ.சி., மரச்சாமான்கள் எரிந்து நாசமாகின.
விபத்து குறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.