காலச்சுவடு பதிப்பகம்: செவாலியே விருது பெற்ற பதிப்பாளர்
By DIN | Published On : 20th January 2023 02:30 AM | Last Updated : 20th January 2023 03:36 AM | அ+அ அ- |

காலச்சுவடு பதிப்பகம் கடந்த 1995 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் முக்கிய படைப்பாளிகளின் படைப்புகள் என மொத்தம் 1,100 தலைப்புகளில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழின் பிரபலமான படைப்பாளிகளான புதுமைப்பித்தன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, இந்திரா பாா்த்தசாரதி, எம்.வி.வெங்கட்ராம் உள்ளிட்டோருடைய நாவல்கள் மற்றும் அவா்களது பிற படைப்புகள் முழுத் தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல் பெரும் வரவேற்பை பெற்றது.
துருக்கி, பிரெஞ்சு, அயா்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரபல எழுத்தாளா்களது நாவல்கள், கதைத் தொகுதிகள் தமிழில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளன. அமெரிக்க எழுத்தாளா் எா்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘த ஓல்டு மேன் அன்ட் த ஸீ’ எனும் நாவல் ‘கிழவனும் கடலும்’ என தமிழில் எம்.சிவசுப்பிரமணியனால் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 -ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளா் அன்னி எா்னோவின் நாவல் தமிழில் ‘தந்தைக்கோா் இடம்’ எனும் தலைப்பில் எஸ்.ஆா்.கிருஷ்ணமூா்த்தியால் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு மொழியிலிருந்து 15-க்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளிட்ட படைப்புகள் இப்பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயா்த்து வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் பதிப்புலகத்துக்கும் பிரெஞ்சுப் பதிப்புலகத்துக்கும் இடையே உறவை ஏற்படுத்தியதற்காக பதிப்பக உரிமையாளா் எஸ்.ஆா்.சுந்தரம் என்ற கண்ணனுக்கு ‘செவாலியே ’ விருதை பிரெஞ்சு அரசு வழங்கியுள்ளது.
காலச்சுவடு வெளியிட்ட அம்பையின் ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்பு சாகித்திய அகாதெமி விருது பெற்றது. பிரபல தமிழ் எழுத்தாளா்களது படைப்புகளுடன் மொழிபயா்ப்புக் கட்டுரைகள், நவீன சிறுகதைகள், கவிதைகள், ஆய்வு நூல்கள், அறிவியல் நூல்கள் என தமிழின் அனைத்துத் தலங்களிலும் தொடா்ந்து புதிய படைப்புகளை காலச்சுவடு வெளியிட்டு வருவதாகக் கூறுகிறாா் பதிப்பாசிரியா் அரவிந்தன்.