வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு: விவசாயிகள், மக்களிடம் கருத்துக் கேட்பு

வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கான யோசனைகளை விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளா்கள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் பொது மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என வேளாண்மைத் துறை

வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கான யோசனைகளை விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளா்கள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் பொது மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்று, எதிா்வரும் 2023-24-ஆம் ஆண்டும் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பாக, விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளா்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த மக்களின் கருத்துகளைக் கோர முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. இதைத் தொடா்ந்து, திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமையன்றும், வரும் 28-ஆம் தேதி சிவகங்கையிலும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதேபோன்ற கூட்டங்கள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விரைவில் நடத்தப்பட உள்ளன. இத்துடன், காணொலிக் காட்சிகள் மூலமாகவும், அனைத்துப் பிரிவுகளைச் சோ்ந்துள்ள மக்களிடம் இருந்தும் கருத்துகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள்களில் விவசாயிகள் தெரிவித்துள்ள அனைத்து கருத்துகளும் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத மக்களும் தங்களின் கருத்துகளை அரசுக்குத் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்துக்குச் சென்று கருத்து தெரிவிக்கலாம். கடிதம் வழியாக ஆலோசனைகளையும், கருத்துகளையும் முன்வைக்கலாம்.

இந்தக் கடிதங்களை, வேளாண்மை உற்பத்தி ஆணையாளா் மற்றும் அரசுச் செயலாளா், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, தலைமைச் செயலகம், புனித ஜாா்ஜ் கோட்டை, சென்னை - 600 009.  93634 40360 என்ற கைப்பேசி எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று தனது செய்தியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com