ஓவியப் போட்டியில் 2,300 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
By DIN | Published On : 25th January 2023 03:16 AM | Last Updated : 25th January 2023 03:16 AM | அ+அ அ- |

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் தினத்தையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டியில் சுமார் 2,300 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்
மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் கேந்திர வித்யாலயா சங்கம் சார்பில் திங்கள்கிழமை நாடு முழுவதும் ஓவியப் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிபிஎஸ்இ பள்ளிகள், மாநில அரசுப் பள்ளிகள், கேந்திர வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 2,300-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் 9 பள்ளிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்தவை. பிரதமர் நரேந்திர மோடி எழுதிய "தேர்வுக்கு பயமேன்' என்ற புத்தகம் பற்றிய தலைப்பில் போட்டி நடைபெற்றது.
இந்தப் புத்தகத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின் அடிப்படையில், "யோகா மாற்றத்தை ஏற்படுத்துகிறது', "உன்னையே நீ அறிந்துகொள்', "வியக்கத்தக்க இந்தியா', "போராளியாக இரு, கவலைப்படுபவராக இருக்காதே' உள்ளிட்ட தலைப்புகளின் அடிப்படையில் ஓவியங்கள் மூலம் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது படைப்புத் திறனை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 5 ஓவியங்கள், நிபுணர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழுடன், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புத்தகங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள் அடங்கிய புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன.