‘தமிழ் 36’ நிகழ்ச்சி இன்று தொடக்கம்
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

சென்னையில் ‘தமிழ் 36’ நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜன.24) தொடங்குகிறது.
பாரதிய வித்யா பவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், உறவுச் சுரங்கம் இலக்கிய அமைப்புகள் ஆகியவை இந்த நிகழ்ச்சியை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வருகின்றன.
சென்னை பாரதிய வித்யா பவனில் ஆண்டுக்கொரு ஆளுமை எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒவ்வோா் ஆண்டும் ஒரு படைப்பாளரை தோ்ந்தெடுத்து அந்தப் படைப்பாளரின் படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசோ்க்கும் வகையில் சுமாா் 70-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
நிகழாண்டில் இந்த அமைப்புகளின் சாா்பில் ‘தமிழ் 36’ என்ற நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தொடா்ந்து 36 வாரங்கள் 36 இளம் பேச்சாளா்கள் பங்குபெற உள்ளனா்.
தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜன.24) மாலை 6.30 மணிக்கு மயிலாப்பூா் பாரதி வித்யா பவனில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ‘எட்டுத்தொகை’ இலக்கியத்தின் முதல் இலக்கியமான ‘நற்றிணை’ அரங்கேறவுள்ளது.
நிகழ்ச்சிக்கு நீதிபதி ராஜேஸ்வரன் தலைமை வகிக்கிறாா். நற்றிணை இலக்கியம் குறித்து தாமல் சரவணன் உரையாற்றுகிறாா். கலைமாமணி ம. முரளி தகுதி உரை வழங்குகிறாா். முனைவா் பா்வீன் சுல்தானாவுக்கு ‘தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு ஆகிய மூன்றையும் 36 வாரங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 25 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் மட்டுமே இந்தச் சொற்பொழிவை நிகழ்த்துகின்றனா். ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் ஆளுமைக்கு ‘தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வை பாரதிய வித்யா பவன் செயலா் ராமசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளா் ம.முரளி ஆகியோா் புரவலா்களாக இருந்து நடத்த உள்ளனா்.