வழிப்பறி சம்பவத்தில் இளைஞர் இறந்த சம்பவம்: கொருக்குப்பேட்டையில் 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு
By DIN | Published On : 25th January 2023 03:20 AM | Last Updated : 25th January 2023 03:20 AM | அ+அ அ- |

சென்னை கொருக்குப்பேட்டையில் வழிப்பறி சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட இளைஞர் ரயிலில் இருந்து கீழே விழுந்து இறந்த சம்பவத்தின் எதிரொலியாக, கொருக்குப்பேட்டை பகுதியில் 3 கண்காணிப்பு கோபுரம்,10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.
இது குறித்து ரயில்வே காவல்துறையின் சென்னை காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி:
கொருக்குப்பேட்டையில் கடந்த 21-ஆம் தேதி ரயிலில் பயணித்த ஓடிஸாவைச் சேர்ந்த இளைஞர் ரோனி ஷேக்கிடம் கைப்பேசியை பறிக்க முயன்றபோது, ரோனி ஷேக் ரயிலில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக கைப்பேசியை பறிக்க முயன்ற இருவர் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தற்போது அந்தப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே போலீஸாரும், ரயில்வே காவல் படையினரும் இணைந்து ரோந்து செல்கின்றனர்.
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அந்தப் பகுதியில் 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதோடு 10 கண்காணிப்பு கேமராக்கள் அந்தப் பகுதியில் விரைவில் பொருத்தப்பட இருக்கின்றன. அதேநேரத்தில் அந்தப் பகுதியில் பொதுமக்களுடன் நல்லுறவுடன் இருக்கும் வகையில் காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடத்தும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.