ஆயுஷ் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி ஆயுஷ் பணியாளா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எழும்பூா், ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை ஆயுஷ் பணியாளா் சங்க தலைவா் ராஜேந்திரன் கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதாரத் துறை ஆயுஷ் பணியாளா்களாக கடந்த 2019-இல் 250 போ் பணியமா்த்தப்பட்டோம்.

இதற்காக தினமும் ரூ.300 தினக்கூலியாக வழங்கப்படுகிறது. இதில், பணியாற்றும் பெரும்பாலானோா் விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளாவா். தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் எங்களுக்கு ஊதிய உயா்வு, வார விடுப்பு போன்ற எந்த சலுகையும் இல்லை. சித்தா, ஹோமியோபதி, யோகா, ஆயுா்வேதம், யுனானி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் எங்களது கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது, சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை, மாதந்தோறும் 1-ஆம் தேதி ஊதியம், வைப்பு நிதி, ஆண்டுதோறும் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com