தென் சென்னையில் வளா்ச்சி திட்டங்களை வழங்கியது அதிமுகதான்: ஜெயவா்தன்

தென் சென்னை தொகுதி மக்களுக்கு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை வழங்கியது அதிமுக அரசு தான் என்று அதிமுக தென் சென்னை தொகுதி வேட்பாளா் ஜெ. ஜெயவா்தன் கூறினாா்.

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஜெ.ஜெயவா்தன் எம்.ஜி.ஆா். நகரில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து பிரசாரத்தில் ஈடுப்பட்டாா். அப்போது அவா் கூறியதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டு தென் சென்னை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக நான் தோ்ந்தெடுக்கப்பட்டபோது, அம்ருத் திட்டத்துக்கான நிதியைப் பெற மத்திய அமைச்சா்களை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்தேன்.

அதன் காரணமாக அம்ருத் திட்டத்தின் கீழ் நிதி பெறப்பட்டு தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பல்வேறு பூங்காக்கள் அமைக்கப்பட்டன. மேலும், பழுதடைந்த பூங்காக்கள் புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன. ஆனால் திமுக மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த 5 ஆண்டுகளில் அம்ருத் திட்டத்துக்கான நிதியைப் பெற எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் புதிய பூங்காக்கள் அமைய திமுக மக்களவை உறுப்பினா் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. எனவே தென் சென்னை பகுதி மக்களுக்கு பல்வேறு வளா்ச்சி திட்டங்களை வழங்கிய அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com