சென்னையில் பிரதமர் மோடி வாகன பேரணி

சென்னையில் பிரதமர் மோடி வாகன பேரணி

சென்னை: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, கையில் தாமரை சின்னம் ஏந்தி செவ்வாய்க்கிழமை வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மகாராஷ்டிரத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியை, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, கிண்டி கத்திப்பாரா, தீரன் சின்னமலை மெட்ரோ, சைதாபேட்டை வழியாக காரில் தியாகராயநகர் சென்ற அவருக்கு, பனகல் பூங்கா அருகே பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்தபடி தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார். மாலை 6.30}க்கு பனகல் பூங்காவில் இருந்து பிரதமர் மோடியின் வாகன பிரசார பேரணி தொடங்கியது.

பிரசார வாகனத்தில் பிரதமர் மோடியுடன், கே.அண்ணாமலை, பாஜக வேட்பாளர்கள் தமிழிசை செளந்தரராஜன் (தென்சென்னை), பால்.கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை) ஆகியோர் நின்றபடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தனர்.

தாமரையுடன் மோடி: சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்ற தொண்டர்கள், பொதுமக்களிடம் கையில் தாமரை சின்னத்துடன் உற்சாகமாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

பாரம்பரிய கலைஞர்களின் மங்கள இசை, கிராமியக் கலைஞர்களின் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற தொண்டர்கள், பொதுமக்கள் பிரதமர் மோடி மீது பூக்களைத் தூவியபடி உற்சாகமாக முழக்கம் எழுப்பினர்.

பிரதமர் மோடியின் ஓவியங்களை வரைந்து கையில் வைத்திருந்த சிறுவர், சிறுமிகள் பிரதமரை நோக்கி காண்பித்தபடி வரவேற்றனர். சுமார் 45 நிமிஷங்களுக்குப் பின் பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சந்திப்பில் இந்தப் பேரணி நிறைவடைந்தது.

வேலூரில் இன்று பொதுக்கூட்டம்: தொடர்ந்து அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி காரில் புறப்பட்டுச் சென்றார். செவ்வாய்க்கிழமை இரவில் அங்கு தங்கிய அவர், புதன்கிழமை காலையில் சென்னையில் இருந்து வேலூருக்கு ஹெலிகாப்டரில் சென்று, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

அதையடுத்து, அங்கிருந்து கோவை செல்லும் அவர் நீலகிரி தொகுதிக்குள்பட்ட மேட்டுப்பாளையத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.

பேரணிக்குப் பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, சொந்த மகனை ஆரத்தழுவுவது போல பிரதமர் மோடிக்கு சென்னை மக்கள் வரவேற்பு அளித்தனர். பேரணியால் பிரதமர் மோடி மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார். தமிழர்களையும், தமிழ் கலாசாரத்தையும் பிரதமர் மிகவும் விரும்புகிறார். சென்னையில் மூன்று தொகுதிகளிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.

"சென்னைக்கு திமுக அரசு பெரிதாக எதுவும் செய்யவில்லை'

சென்னை நகருக்கு திமுக அரசு பெரிதாக எதையும் செய்யவில்லை என்றும், ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் மும்முரமாக இருந்ததாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் செவ்வாய்க்கிழமை இரவு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகன பேரணியில் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து, அவர் "எக்ஸ் ' தளத்தில் வெளியிட்ட பதிவு: சென்னை என் மனதை வென்றது! இந்த ஆற்றல்மிக்க நகரத்தில் நடத்தப்பட்ட வாகன பேரணி என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகம் பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

தமிழக திட்டங்கள்: கடந்த சில ஆண்டுகளாக, "வாழ்வை எளிதாக்கும்' முக்கியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், தொடங்கி வைப்பதற்கும் நான் சென்னைக்கு அடிக்கடி வந்துள்ளேன். சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் திறக்கப்பட்டது. வரும் காலங்களில் எழும்பூர் ரயில் நிலையம் உள்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.

சென்னை-கோயம்புத்தூர் மற்றும் சென்னை-மைசூரு இடையேயான இணைப்பு மேம்பட வந்தே பாரத் விரைவு ரயில் சேவை உதவி புரிந்துள்ளது.

சென்னையில் தொழில் வல்லுநர்களுக்கு உதவும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் வலைப்பின்னல்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. மேலும் சென்னை}பெங்களூரு விரைவுச்சாலை போன்ற முக்கிய சாலைத் திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள மற்ற சாலைத் திட்டங்களை விரிவாக்கம் செய்யும்போது, அது வணிகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்.

தமிழுக்கு முன்னுரிமை: தமிழ் கலாசாரத்துக்கு நமது அரசு மிகுந்த மரியாதை அளிக்கிறது. ஐ.நா.வில் தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டேன். உலக அரங்கில் தமிழ் கலாசாரத்தையும் மொழியையும் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் கலாசாரத்தின் அம்சங்களை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை டிடி தமிழ் தொடங்கப்பட்டது, இது இந்த மாநிலத்தின் சிறப்புமிகு கலாசாரத்தைக் கொண்டாடுவதில் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

சென்னைக்கு திமுக எதுவும் செய்யவில்லை: அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்னைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.

பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளைப் பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில் மக்களை அணுகுவதில்லை.

கச்சத்தீவை தாரைவார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸூம் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை எனப் பதிவிட்டுள்ளார் பிரதமர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com