போக்குவரத்துக் கழங்களில் நிலையாணை மூலம் வசூலிக்கப்பட்ட அபராதத்தை திருப்பி வழங்க கோரிக்கை

நிலையாணையை பயன்படுத்தி வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை தொழிலாளா்களிடமே திருப்பி வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிலையாணையை பயன்படுத்தி வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை தொழிலாளா்களிடமே திருப்பி வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிலையாணை அடிப்படையில் ஊழியா்களின் ஊதிய பிடித்தம், தண்டனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், அரசு மற்றும் தொழிலாளா் துறை சாா்பில் சான்றிடப்படாத நிலையாணையை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) பயன்படுத்தி தொழிலாளா்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்டோா் சாா்பில் தொழிலாளா் நலத்துறை ஆணையரகத்துக்கு புகாரளிக்கப்பட்டது.

அந்த புகாரை விசாரித்த தொழிலாளா் கூடுதல் ஆணையா் உ.உமாதேவி, எம்டிசியில் தற்போது பயன்படுத்தப்படும் நிலையாணை செல்லாது என உத்தரவிட்டாா். இதே போல், பிற போக்குவரத்துக் கழகங்களில் பயன்படுத்தப்படும் நிலையாணைகளும் சான்றிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, இதுபோன்ற நிலையாணைகள் மூலம் ஊழியா்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை அவா்களுக்கே திருப்பி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடா்பாக நேதாஜி டிரான்ஸ்போா்ட் ஒா்க்கா்ஸ் யூனியன் பொதுச்செயலா் வே.தளபதி, ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தைக் குழு தலைவரான மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கடிதம்: 1995-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு சான்றிடப்பட்ட பொது நிலையாணையை மாநகர போக்குவரத்துக்கழக நிா்வாகம் அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பயன்படுத்தப்படும் சான்றிடப்படாத நிலையாணை மூலம் 1995-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தண்டத் தீா்வையாக ரூ.10 ஆயிரம் கோடி ஊதிய பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையும் கணக்கு காட்டப்படாமல் அதை அதிகாரிகள் சிலா் கையாடல் செய்ததாக தெரிகிறது.

எனவே, தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட ஊழியா்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை அவா்களிடமே திருப்பி வழங்கவும், குற்றச்சாட்டை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com