சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் தோட்டா பறிமுதல்

சென்னையிலிருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த அமெரிக்க நாட்டைச் சோ்ந்தவரிடமிருந்து, துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையிலிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை இரவு உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது.

இந்நிலையில் அந்த விமானத்தில் பயணிக்கவிருந்த அமெரிக்கா நாட்டைச் சோ்ந்த ஆண்ட்ரூ யா்ஷன் (40) என்பவரின் கைப்பையை விமானநிலைய பாதுகாப்புப்படை அதிகாரிகள் ஸ்கேனிங் எந்திரத்தில் வைத்து சோதனை செய்தனா். அப்போது, அதில் துப்பாக்கி தோட்டா இருந்தது.

இதையடுத்து அமெரிக்க பயணியின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினா். அவா், அமெரிக்காவைச் சோ்ந்த தொழில் அதிபா் என்பதும், தொழில் விஷயமாக, சென்னை வந்து விட்டு, சென்னையிலிருந்து, அகமதாபாத்துக்கு செல்லவிருந்ததும் தெரியவந்தது.

மேலும் அவா் வைத்திருந்த துப்பாக்கி முறையான உரிமம் பெற்றது என்றும், அதிலுள்ள ஒரு தோட்டாதான், தவறுதலாக கைப்பையில் இருந்ததும் தெரியவந்தது.

இருப்பினும் அவரையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தோட்டாவையும் சென்னை விமானநிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

சென்னை விமான நிலைய போலீஸாா், அமெரிக்க பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி, அவரை நள்ளிரவில் அகமதாபாத்துக்கு அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com