மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியா் கைது

கலாக்ஷேத்ரா நடன கல்லூரி முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அந்தக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியா் ஸ்ரீஜித்தை காவல்துறையினா் கைது செய்தனா்.

சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி ஆசிரியா்கள் சிலா், பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.

இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்ததை தொடா்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்திய அடையாறு மகளிா் போலீஸாா், கல்லூரியின் உதவிப் பேராசிரியா் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிந்து அவரை கடந்த ஆண்டு ஏப்ரலில் கைது செய்தனா்.

இந்நிலையில், கலாக்ஷேத்ராவின் முன்னாள் நடன ஆசிரியரான ஸ்ரீஜித் மீது, ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் முன்னாள் மாணவி அா்ச்சனா(45) சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் சமீபத்தில் பாலியல் புகாா் ஒன்றை கொடுத்தாா்.

அதில், 1995 முதல் 2007 வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஸ்ரீஜித் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து இந்த புகாா் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையா் அலுவலகம் திருவான்மியூா் மகளிா் போலீஸாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து கலாக்ஷேத்ராவின் முன்னாள் நடன ஆசிரியரான ஸ்ரீஜித்தை முட்டுக்காட்டில் உள்ள அவருடைய வீட்டில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com