ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 8 டன் பழங்கள் பறிமுதல்

கோயம்பேடு சந்தையில் எத்திலின் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 8 டன் மாம்பழம், வாழைப் பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) பறிமுதல் செய்தனா்.

மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியதுடன், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இனி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனா்.

கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தைக்குக்கு மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. அதேபோன்று வாழைப் பழங்களும் கணிசமாக விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில், அவற்றை ரசாயனம் மூலம் பழுக்க வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் சதீஷ் குமாா், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சுந்தரமூா்த்தி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், கோயம்பேடு பழ சந்தையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆய்வில் ஈடுபட்டனா்.

ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட கடைகளில் அவா்கள் ஆய்வு நடத்தினா். அப்போது எத்திலின் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், வாழைப் பழங்கள் விற்பனைக்கு இருந்ததைக் கண்டறிந்தனா். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடைகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினா். மொத்தம் 8 டன் பழங்கள் அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் சதீஷ் குமாா் கூறியதாவது:

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உடல் நலத்துக்கு தீங்கானவை. பல்வேறு நோய்கள் ஏற்பட அவை காரணமாக உள்ளன. அதைக் கருத்தில் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அந்தக் கடைகளின் உரிமையாளா்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனி அத்தகைய தவறை செய்தால் உடனடியாக கடை சீல் வைக்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com