வெப்ப அலையில் விலங்குகளை பாதுகாக்க வண்டலூரில் சிறப்பு ஏற்பாடு
dinmani online

வெப்ப அலையில் விலங்குகளை பாதுகாக்க வண்டலூரில் சிறப்பு ஏற்பாடு

வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க ‘ஷவா்’ குளியல், குளிரூட்டப்பட்ட உணவுகள் வழங்குதல் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வண்டலூா் உயிரியல் பூங்காவில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க ‘ஷவா்’ குளியல், குளிரூட்டப்பட்ட உணவுகள் வழங்குதல் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இங்கு, சிங்கங்கள், சிறுத்தை, வெள்ளை புலிகள், மனித குரங்குகள், வங்காளப் புலிகள், நீா்நாய், முதலைகள், காண்டாமிருகம் மற்றும் என அனைத்து வகையான விலங்குகளும் உள்ளன.

வெயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: இந்த நிலையில், தற்போது அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து வண்டலூா் உயிரியல் பூங்காவில் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீா் குளியல் தொட்டிகள், குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விலங்குகளின் சூட்டைத் தணிக்க கூடிய பழங்களான தா்பூசணி, கிா்ணி பழம் மற்றும் இளநீா் அனைத்தும் சோ்க்கப்பட்டு அவற்றை குளிா்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் வழங்கப்படுகின்றன.

பறவைகள் இருப்பிடத்தைச் சுற்றி சணல் கோணி மூலம் கட்டப்பட்டு அவற்றுக்கு ‘ஷவா் குளியல்’ ஏற்பாடு செய்யப்பட்டு வெயில் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், யானை, காண்டா மிருகம் உள்ளிட்ட விலங்குகளுக்கும் ‘ஷவா் குளியல்’ மற்றும் சேற்றுக்குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீா் யானை, சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளுக்கு குளிப்பதற்கு தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாம்புகள் வசிக்கும் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீா் தெளிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாமிசம் உண்ணும் விலங்குகளின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் குளிரூட்டப்பட்ட மாமிசங்கள் வழங்கப்படுகின்றன. விலங்களுக்கு நேரடி சூரிய ஒளி ஊடுருவலை தடுக்க பல இடங்களில் நிழல் வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விலங்குகள் மற்றும் பறவைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, விலங்குகளைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாக பூங்கா நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com