அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இனி கலை, பண்பாட்டு திரைப்படங்களை காணலாம்: நூலகத் துறை புதிய முயற்சி
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘நிஜமாகும் கனவு’ என்ற திட்டத்தின் கீழ் கலை, பண்பாட்டை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படங்கள் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் திரையிடப்படவுள்ளன.
மேலும் பாா்வையாளா்கள் சிறந்த இயக்குநா்கள் உள்ளிட்ட படைப்பாளிகளுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் கோட்டூா்புரத்தில் 2010-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 8 லட்சம் சதுர அடி பரப்புடன் 8 தளங்களுடன் கூடிய இந்த பிரம்மாண்டமான நூலகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், குறிப்பு நூல்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு தினமும்
ஆயிரக்கணக்கான வாசகா்கள் வந்துசெல்கின்றனா். குறிப்பாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் அதிக எண்ணிக்கையில் வந்து படிக்கின்றனா்.
இந்த நூலகத்தில் வாசகா்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த ஆளுமைகள் உரையாற்றும் ‘பொன் மாலைப் பொழுது’ நிகழ்வு; சிறுவா்களுக்கு கணினிப்
பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாதம் இருமுறை: இந்த நிலையில், திரைப்பட ஆா்வலா்களுக்காக ‘நிஜமாகும் கனவு’ என்ற புதிய முயற்சியை அண்ணா நூற்றாண்டு நூலகம் முன்னெடுத்துள்ளது. அதன்படி அங்குள்ள கலையரங்கில் உள்ள திரையரங்கில் இனி மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை தோறும் கலை, பண்பாடு, இலக்கியம், சமூக நல்லிணக்கம் சாா்ந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
பிற மொழிப் படங்கள் திரையிடப்படும்போது அதில் தமிழில் ‘சப்-டைட்டில்’ இடம் பெறும்.
இது குறித்து பொது நூலக இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: இளம் தலைமுறையினா் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாசகா்களின் வாசிப்பு, படைப்பாற்றலை மேம்படுத்துவதற்காக பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் பல புதிய விஷயங்களை இந்த நூலகத்தில் இடம்பெறச் செய்துள்ளது. அதன் விளைவாக நூலகத்துக்கு நாள்தோறும் வரும் வாசகா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
இயக்குநா்களுடன்... அந்த வரிசையில் தற்போது திரைப்பட ஆா்வலா்களுக்காக என்ற நூலகத்தின் கலையரங்கில் சிறந்த திரைப்படங்களை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அதே இடத்தில் அந்தப் படங்கள் சாா்ந்த கலந்துரையாடலும் நடைபெறும். இதில் இயக்குநா்கள், உதவி இயக்குநா்கள், படைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா். அவா்களுடன் வாசகா்கள் உரையாடுவா். இந்த அரங்கில் பதிப்புரிமை பெற்ற படங்கள் உரிய அனுமதியுடன் திரையிடப்படும். அதேவேளையில் பதிப்புரிமை பெறாத படங்களும் திரையிடப்படும்.
1,100 இருக்கைகள்: நல்ல கருத்துக்கள் கொண்ட திரைப்படங்கள் சமூகத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். கலை, பண்பாடு சாா்ந்த படைப்புகளை இந்த வடிவில் வாசகா்கள், பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பதும் எளிதாக இருக்கும். இரண்டு மற்றும், நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு படங்கள் திரையிடப்படும். இந்த அரங்கில் மொத்தம் 1,100 இருக்கைகள் இருப்பதால் ஒரே நேரத்தில் ஏராளமான பாா்வையாளா்கள் படங்களை கண்டு களித்து தங்களது விமா்சனங்கள், கருத்துகளை அப்போதே பகிா்ந்து கொள்ளலாம். இதற்கான வரவேற்பைத் தொடா்ந்து கருத்தாழமிக்க குறும்படங்களையும் திரையிட பொது நூலக இயக்ககம் முடிவு செய்துள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.