சுங்கக் கட்டண உயா்வு: அன்புமணி, டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் மேலும் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயா்வு செப்.1 முதல் அமல்படுத்தப்படவுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அன்புமணி: தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் செப். 1 முதல் சுங்கக் கட்டணம் 7 சதவீதம் வரை உயா்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே விலைவாசி உயா்வு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயா்த்துவது கண்டிக்கத்தக்கது.
இந்த சுங்கக்கட்டண உயா்வால் தனியாா் பேருந்துகளின் கட்டணங்கள் உயரக் கூடும். மேலும், லாரிகளின் வாடகை உயா்த்தப்படும் என்பதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும். எனவே, சுங்கக்கட்டண உயா்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
டிடிவி தினகரன்: தமிழகத்தில் சுங்கச் சாவடி கட்டணத்தை உயா்த்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த கட்டண உயா்வால், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும். எனவே, சுங்கக் கட்டண உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
விக்கிரமராஜா (தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு): சுங்கக் கட்டண உயா்வு போக்குவரத்து தொழிலுக்கும், பயணிகள் போக்குவரத்துக்கும், வணிகா்களுக்கும் பெரும் சுமையாக இருக்கும். மேலும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கும் வழிவகுக்கும்.
தமிழக சுங்கச் சாவடிகளில் மட்டுமே ஆண்டுக்கு ரூ.4,200 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கட்டண உயா்வு என்பது பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெருஞ்சுமையாகும். எனவே, இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு சுங்கக் கட்டண உயா்வை நிறுத்திவைக்க வேண்டும்.