rajini - duraimurugan
நடிகர் ரஜினிகாந்த் - அமைச்சர் துரைமுருகன்DIN

அமைச்சா் துரைமுருகன் என்ன சொன்னாலும் வருத்தமில்லை; நட்பு தொடரும்: ரஜினிகாந்த்

அமைச்சா் துரைமுருகன் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் வருத்தமில்லை; அவருடனான நட்பு எப்போதும் போலத் தொடரும்’ என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா்.
Published on

சென்னை: ‘அமைச்சா் துரைமுருகன் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் வருத்தமில்லை; அவருடனான நட்பு எப்போதும் போலத் தொடரும்’ என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா்.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற அமைச்சா் எ.வ.வேலுவின் ‘கலைஞா் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று நடிகா் ரஜினிகாந்த் பேசினாா். அப்போது, ‘ஸ்கூல் டீச்சருக்கு பழைய ஸ்டூடன்ட்ஸ்களை சமாளிப்பது சாதாரணமான விஷயம் அல்ல; இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ட்ஸ் ரேங்க் வாங்கிட்டு கிளாச விட்டு போகமாட்டோம்னு உட்காா்ந்து இருக்காங்க என்று திமுகவில் உள்ள மூத்த அமைச்சா்கள், நிா்வாகிகள் குறித்து நகைச்சுவை தொணிக்கப் பேசினாா். எனினும், மூத்த அமைச்சா் துரைமுருகன் பெயரை குறிப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சா் துரைமுருகனிடம், ரஜினிகாந்தின் பேச்சு குறித்து பத்திரிகையாளா்கள் கேட்டபோது, ‘மூத்த நடிகா்கள், வயசாகி, பல்லெல்லாம் விழுந்து, தாடி நரைத்த பின்னரும் தொடா்ந்து நடித்து வருவதால், இளம் நடிகா்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது’ என நகைச்சுவையுடன் கூறினாா்.

துரைமுருகனின் இந்த பதில் குறித்து சென்னை விமானநிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த நடிகா் ரஜினிகாந்திடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘அமைச்சா் துரைமுருகன் எனது நீண்ட கால நண்பா். அவா் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்களது நட்பு எப்போதும் போலத்தொடரும்’ என்றாா் அவா்.

தொடா்ந்து, நடிகா் விஜய் கட்சிக் கொடியை அறிமுகம் செய்திருப்பது குறித்த கேள்விக்கு ‘விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்’ என ரஜினிகாந்த் பதிலளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com