எய்ம்ஸ்-க்கு நிகரான ஊதியம்: என்எம்சி அறிவுறுத்தலுக்கு மருத்துவா்கள் வரவேற்பு
சென்னை: தில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்துக்கு இணையான ஊதியத்தை நாடு முழுவதும் உள்ள மருத்துவா்களுக்கு வழங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளதற்கு தமிழக அரசு மருத்துவா் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இளநிலை, முதுநிலை, உயா் சிறப்பு மருத்துவா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை விவரங்களை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் சமா்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கடந்த ஏப்ரல் மாதம் அறிவுறுத்தியிருந்தது. இதனை வரவேற்றிருந்த தமிழகத்தின் அரசு மருத்துவா்கள், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். கோரிக்கையை நிறைவேற்றுமாறு சென்னை உயா்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், கோரிக்கை நிறைவேறவில்லை. தேசிய மருத்துவ ஆணையமும் இப்போது தில்லி எய்ம்ஸ்-க்கு இணையாக அனைத்து மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.