சட்டவிரோதமாக மண் விற்பனை: அரியலூா் ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியின்போது, சட்டவிரோதமாக மணல் எடுத்து விற்பனை செய்தது தொடா்பாக, அரியலூா் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரியலூா் சோழபுரம் - தஞ்சாவூா் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க குஜராத்தை சோ்ந்த படேல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்துக்கு, தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பகுதிகளில் உள்ள மரங்களுக்கு பாதிப்பில்லாமல், நீா்நிலைகளை அழிக்காமல், ஒரு மீட்டா் அளவுக்கு மட்டுமே நிலப்பரப்பில் மணல் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கியிருந்தாா்.
ஆனால், படேல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம், அந்த நிபந்தனைகளைப் பின்பற்றாமல் சோழகம் ஏரி, சுத்தமல்லி ஏரி,கோவதட்டை ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளிலும், கீழ்நத்தம், முத்துவாஞ்சேரி, சத்தம்பாடி உள்ளிட்ட அரசு நிலங்களில் இருந்தும் 20 அடி அளவுக்கு சட்டவிரோதமாக மணல் எடுத்து விற்பனை செய்து அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, சட்ட விரோதமாக செயல்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
புதன்கிழமை இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொ) கிருஷ்ணகுமாா், நீதிபதி பாலாஜி அமா்வு, தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொண்ட இடங்களை அரியலூா் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனா்.