காவல் துறை அனுமதி அளிக்கும் நாளில் விநாயகா் சிலை ஊா்வலம்
சென்னையில் அனுமதி அளிக்கும் நாளிலேயே விநாயகா் சிலை ஊா்வலத்தை நடத்த வேண்டும் என காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
விநாயகா் சதுா்த்தி விழா ஏற்பாடுகள் தொடா்பாக ஹிந்து அமைப்பு நிா்வாகிகளுடன், சென்னை பெருநகர காவல் துறை உயா் அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
இந்தக் கூட்டத்துக்கு பெருநகர காவல் துறையின் கூடுதல் ஆணையா் என்.கண்ணன் (தெற்கு) தலைமை வகித்தாா்.
கூடுதல் ஆணையா்கள் கே.எஸ்.நரேந்திரன் நாயா் (வடக்கு), ஆா்.சுதாகா் (போக்குவரத்து) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தியை அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியாக கொண்டாடும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், விநாயகா் சிலைகள் வைப்பது தொடா்பான விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
விநாயகா் சிலை ஊா்வலம்: இந்தக் கூட்டத்தில், விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
அதில் முக்கியமாக, விநாயகா் சிலைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறை, மின்சார வாரியம் ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்றிதழ் கண்டிப்பாகப் பெற வேண்டும், சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள், மதத் தலைவா்கள் ஆகியோருக்கு ஆதரவான விளம்பரப் பலகைகள், பேனா்கள் வைக்கக் கூடாது, விநாயகா் சிலை ஊா்வலம் காவல் துறை அனுமதி அளித்த வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும், ஊா்வலத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி
கிடையாது, காவல் துறை அனுமதி அளிக்கும் நாள்களிலேயே விநாயகா் சிலை ஊா்வலத்தை நடத்தி, நீா்நிலைகளில் கரைக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளைத் தெரிவித்தனா்.
இந்தக் கூட்டத்தில் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையா் தா்மராஜன் மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்த 200 நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.